இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளார் ராகுல் காந்தி. அதன்படி, மணிப்பூரில் தொடங்கப்பட்ட யாத்திரை, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம், பிகார், மேற்குவங்கம், ஜார்க்கண்டை தொடர்ந்து ஒடிசா சென்றடைந்துள்ளது.


பிரதமர் மோடி மீது பரபரப்பு குற்றச்சாட்டு:


ஒடிசா மாநிலத்தில் யாத்திரையின்போது பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பிரதமர் மோடி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சேர்ந்தவர் அல்ல, பொதுப்பிரிவை சேர்ந்த அவர் தன்னை ஓபிசி என சொல்லி கொண்டு மக்களை ஏமாற்றி வருவதாக பேசியுள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடி, ஓபிசி சமூகத்தில் பிறக்கவில்லை. அவர் குஜராத்தில் தெலி சாதியில் பிறந்தவர். கடந்த 2000 ஆம் ஆண்டு, தெலி சாதியை பா.ஜ.க.தான் ஓபிசி பிரிவில் சேர்த்தது. பொது பிரிவை சேர்ந்தவர் பிரதமர் மோடி. அவர் ஓபிசி சமூகத்தில் பிறக்கவில்லை, பொது பிரிவில் பிறந்தவர் என்பதால் தன் வாழ்நாள் முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விடமாட்டார்" என்றார்.


மக்களவை தேர்தலுக்கு 45 நாள்கள் கூட இல்லாத நிலையில், பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் ஓபிசி மற்றும் பட்டியலின, பழங்குடி மக்களுக்கான இடஒதுக்கீடு வரம்பை உயர்த்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வருகிறது.


ஓபிசி அரசியலை கையில் எடுத்துள்ள ராகுல் காந்தி:


குறிப்பாக, ஓபிசி மக்களுக்கான அரசியலை கையில் எடுத்துள்ள ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு நேர் எதிராக, தேர்தல் பிரச்சாரம் தொடங்கி நாடாளுமன்ற வரை, பிரதமர் மோடி தன்னுடைய ஓபிசி அடையாளத்தை முன்னெடுத்து வருகிறார்.


நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராக இருப்பதால் அவர்களை தன் பக்கம் இழுப்பதில் காங்கிரஸ், பாஜக போட்டியிட்டு வருகிறது.


 






ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் மாநில கட்சிகளே செல்வாக்கு மிக்கதாக உள்ளன. குறிப்பாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஓபிசி மக்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றுள்ளது.


வரும் மக்களவை தேர்தலில், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அவர்களே மத்தியில் ஆட்சி அமைப்பார்கள்.