தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்து 7 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பா.ஜ.க. ஆட்சி சாதனைகளைச் செய்ததாக நாளேடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் மக்கள் வரிப்பணத்திலிருந்து ரூ.4,880 கோடி செலவு செய்து விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. விளம்பரங்களால் தோல்விகளை மூடிமறைக்க முடியாது. கடந்த 7 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு நிகழ்த்தியதாகக் கூறப்படுகிற சாதனைகளை ஆய்வு செய்தால், இமாலய தோல்விகளையே பா.ஜ.க. அரசு நிகழ்த்தியதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.



கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காகக் கூட்டுவோம், எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை நிறைவேற்றுவோம், வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரூ.85 லட்சம் கோடி கறுப்புப்பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமக்களின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என வாக்குறுதிகளை வழங்கி பிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்தார். ஆனால் தற்போது வரலாறு காணாத வகையில் மும்பை மாநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100, சென்னையில் ரூ. 95.76 ஆகவும், டீசல் ரூ.89.90 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த பெட்ரோல் விலையில் மத்திய, மாநில அரசுகளின் வரி 60 சதவீதமாகவும், டீசலில் 54 சதவீதமாகவும் விதிக்கப்பட்டு வருகிறது. மக்களின் மீது சுமையை ஏற்றிய மக்கள் விரோத அரசாக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் போக்குவரத்துக் கட்டணம் அதிகரித்து மக்களுக்குத் தேவைப்படுகிற அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்கிறது. பணவீக்கம் 11.3 சதவீதமாக உயர்ந்து மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.



100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 2020 ஆம் ஆண்டில் மட்டும் 13 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. பிரதமர் மோடியின் நண்பர்களான முகேஷ் அம்பானியின் சொத்து 3 மடங்காகவும், அதானியின் சொத்து 6 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது. அதேபோல, கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் 2020 இல் அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய மொத்த நன்கொடை ரூ. 2,773 கோடி. இதில் பா.ஜ.க.வுக்கு மட்டும் வழங்கப்பட்டது ரூ.1,660 கோடி. மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சி ஏழை, எளிய மக்களுக்காக நடக்கிறதா? அம்பானி, அதானியின் சொத்துக்குவிப்புக்காக நடக்கிறதா? என்ற கேள்விக்கு பா.ஜ.க.வினர் பதில் கூற வேண்டும். என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.


 


எனவே, கடந்த 7 ஆண்டுகளாக இந்தியாவை ஆளுகிற பிரதமர் மோடி அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்ததோடு, கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டார் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை. உலக வல்லரசுகளின் ஒன்றாக இருக்கிற இந்தியாவால் அணுசக்தித்துறையின் மூலம் அற்புதங்கள் செய்து அணுகுண்டு தயாரிக்க முடிந்தது. ஆனால் மக்களின் உயிரைப் பாதுகாக்க ஒரு தடுப்பூசியைக் கூட இந்திய அரசால்  உற்பத்தி செய்ய முடியவில்லை. கடந்த காலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசி உற்பத்தி செய்து, கொள்ளை நோயிலிருந்து மக்களின் உயிரை அன்றைய  மத்திய அரசுகள் பாதுகாத்தன. ஆனால், 136 கோடி மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பேராயுதமாக விளங்குகிற தடுப்பூசி உற்பத்தியை இரண்டு நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைத்ததால் மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மடிந்துகொண்டிருக்கிறார்கள். தற்போது ஏற்பட்டுள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறிய பிரதமர் மோடி அதற்கு மக்கள் வழங்கும்  தண்டனையிலிருந்து  நிச்சயம் தப்பமுடியாது. எனவே, 7 ஆண்டு மோடி ஆட்சியை வேதனையிலும் வேதனையான ஆட்சியாகத் தான் நாட்டு மக்கள் கருதுகிறார்கள் என கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்