திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று மளிகை பொருட்கள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் ABP நாடு இணையத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூறியதாவது..

 

‛‛தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சிகளால் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் உணவுகள் குறித்தும் தமிழக முதல்வர் கேட்டறிந்துள்ளார்.

 

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள காலநிலை மாற்றம் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனை தமிழக முதல்வர் நியமித்துள்ளார். கடந்த 10 தினங்களுக்கு முன்னர் பரிசோதனை செய்பவர்களில் 30 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்ட நிலையில், நேற்றைய நிலவரப்படி பரிசோதனை செய்பவர்களில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 16.8 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சரிபாதியாக குறைந்துள்ளது. மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

 

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிராமப்புறங்களுக்கு மருத்துவர்கள் நேரடியாகச் சென்று மருத்துவ முகாம்கள் நடத்தி தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். மிக விரைவிலேயே கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் மாறும். அதே போல் தமிழகமும் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக விரைவில் மாறும்.

 

திருவாரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதிகொண்ட 300 படுக்கைகள் இருந்த நிலையில் தற்போது 450 க்கு மேல் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு எதுவும் இல்லை. ஆகையால் 15 தினங்களுக்குள்ளாக திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமும் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக நிச்சயமாக மாற்றம் பெறும்.

 

கிராமப்புறங்களில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக நேரில் சென்று ஆய்வு செய்து குறைவான அளவு பாதிப்புடைய நபர்களை மருத்துவ மையங்களிலும், தீவிர பாதிப்பு அடைந்தவர்களை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற அனுமதித்து இறப்பு சதவீதத்தை பெரும்பான்மையான அளவு குறைத்து வருகிறோம். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை உடனடியாக தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து பிறரோடு அவர்கள் தொடர்பு கொள்ளாத வகையில் பாதுகாப்பை ஏற்படுத்தி அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறி, மளிகை உணவுகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு உடை அணிந்த முன் களப்பணியாளர் மூலமாக கொண்டு சென்று மக்களுக்கு வழங்கி வருகிறோம். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள்.

 

பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் வேலை இழந்த மற்றும் ஆதரவற்ற பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் திருவாரூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் முன்கள பணியாளர்களாக உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் உணவுகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறோம். பசி என்ற நிலையே திருவாரூர் மாவட்டத்தில் இல்லாதவகையில் கோவில்களில் வழங்கப்பட்டு வந்த அன்னதான திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மருத்துவமனைகளில் வழங்க தமிழக முதல்வரின் உத்தரவின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.