மயிலாடுதுறை காவேரி நகரில் உள்ள மயிலாடுதுறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நியாய விலைக் கடையில் கூட்டுறவு துறை சார்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சீனி மற்றும் முழு நீளக் கரும்பு ஆகியவைகள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேச்சு
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது; தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடிட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சீனி மற்றும் 1 முழுக் கரும்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையினை தொடர்ந்து நமது மாவட்டத்தில் உள்ள 2 இலட்சத்து 83 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பானது 283 மெ.டன் பச்சரிசி, 283 மெ.டன் சீனி, 2 லட்சத்து 83 ஆயிரம் முழுக்கரும்பு வழங்கப்பட உள்ளது.
ஜனவரி 13-ம் தேதி வரை கால அவகாசம்
பொங்கல் பரிசு தொகுப்பானது கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்படும் 414 நியாய விலைக்கடைகள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 10 நியாயவிலைக் கடைகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் நடத்தும் 10 நியாயவிலைக் கடைகள், கோழி வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் நடத்தும் 1 நியாய விலைக் கடை ஆக 435 நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பானது வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சரால் இன்றைய தினம் இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பானது ஜனவரி 13 -ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்படும்.
கூட்டுறவுத்துறையின் சாதனைகள்
இவ்விழாவினை ஏற்பாடு செய்துள்ள கூட்டுறவுத் துறையினை பொருத்தமட்டில் 2024-2025 ஆண்டில் பயிர் கடன் வழங்க 210 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில் 07.01.2025 தேதி வரை 23,949 விவசாயிகளுக்கு 66818 ஏக்கருக்கு 201.04 கோடி ரூபாய் கடன் வழங்கி சாதனை செய்துள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த ஆண்டு கடன் வழங்க 82 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதில் 07.01.2025 தேதி வரை 2250 மகளிர் குழுக்களுக்கு 67.13 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. மாற்றுதிறனாளிகளுக்கு கடன் வழங்குதலிலும் கூட்டுறவுத் துறையானது சிறப்பாக செயல்பட்டு தற்போது வரை 56 லட்சம் ரூபாய் நிர்ணயம் இலக்கு செய்யப்பட்டதில் 65 மாற்றுதிறனாளிகளுக்கு 33.72 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஷ்வரி, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், முதுநிலை மண்டல மேலாளர் மோகன், மயிலாடுதுறை நகர்மன்ற துணைத் தலைவர் சிவக்குமார், மயிலாடுதுறை நகர்மன்ற உறுப்பினர் சுதா முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.