Passport Ranking 2025: நடப்பாண்டில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் லிஸ்ட்டில், இந்தியாவிற்கு எந்த இடம் என இந்த தொகுப்பில் அறியலாம்.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்:
2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற புகழ்பெற்ற நிறுவனத்தால் இந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. எந்த பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர் எந்த விசாவும் இல்லாமல் எத்தனை நாடுகளுக்குச் செல்லலாம் என்பதன் அடிப்படையில், இந்த பாஸ்போர்ட்களின் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, சிங்கப்பூரின் பாஸ்போர்ட் உலகின் மிக சக்திவாய்ந்த பாஸ்போர்ட் ஆகும். இந்த நாட்டின் பாஸ்போர்ட் உள்ளவர்கள், உலகின் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
இரண்டாவது சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்:
சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜப்பானிய பாஸ்போர்ட் மூலம், 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். இந்த பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில், தென் கொரியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் கூட்டாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளில் விசா இல்லாத நுழைவு அனுமதிக்கப்படுகிறது.
மற்ற நாடுகள்:
ஆஸ்திரியா, அயர்லாந்து, டென்மார்க், லக்சம்பர்க், நார்வே, சுவீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் உலகின் நான்காவது சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் 191 நாடுகளில் விசா இல்லாமல் நுழைய முடியும். அதே நேரத்தில், நியூசிலாந்து, போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் பெல்ஜியம் ஆகியவை 190 நாடுகளில் இலவச நுழைவுடன் ஐந்தாவது சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்டுள்ளன.
இந்திய பாஸ்போர்ட்டின் நிலை?
அண்டை நாடான பாகிஸ்தானின் பாஸ்போர்ட் தரவரிசையை விட இந்தியாவின் பாஸ்போர்ட் தரவரிசை மிகவும் சிறந்த நிலையில் உள்ளது. அதன்படி, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா 85வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் உலகின் 57 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை மேற்கொள்ளலாம். ஆனால், கடந்த ஆண்டை விட இந்தியா 5 இடங்கள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் பாஸ்போர்ட் 9வது இடத்திற்கு சரிந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் அபாரம்:
சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்த முதல் மற்றும் ஒரே நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது. கடந்த 2015 முதல் கூடுதலாக 72 இடங்களுக்கான விசா இல்லாத அணுகலை அந்நாடு பெற்றுள்ளது. இதன் மூலம் உலகளவில் 185 இடங்களுக்கு விசா இல்லாத அணுகலுடன் 32 இடங்கள் முன்னேற்றம் கண்டு, உலகின் 10வது சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டை பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் நிலை:
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. பலவீனமான பாஸ்போர்ட்டுகளில் பாகிஸ்தானின் பாஸ்போர்ட் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. 33 நாடுகளில் இருந்து இலவச விசா அனுமதியுடன் பாகிஸ்தான் 103வது இடத்தில் உள்ளது. அதேசமயம் ஆப்பிரிக்க நாடுகளான சோமாலியா, பாலஸ்தீனம், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் பாகிஸ்தானை விட மேலே உள்ளன. சோமாலியாவின் பாஸ்போர்ட் 102வது இடத்தில் உள்ளது.