கல்வியில் ஒன்றிய அரசு கைவைப்பதாகவும் தமிழக அரசை சிறுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின், யுஜிசி விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.


யுஜிசி புதிய வரைவு அறிக்கை விதிகளுக்கு எதிராக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தனித்தீர்மானம் கொண்டு வந்தார். அதில் யுஜிசியின் புதிய விதிகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார்.


தீர்மானத்தில்,  “பல்கலைக்கழகங்களில்‌ துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக சமீபத்தில்‌ பல்கலைக்கழக  நிதிநல்கைக்‌. குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்‌பப் பெற வேண்டுமென இப்பேரவை கருதுகிறது.


அதேபோல்‌ இளங்கலை, முதுகலைப்‌ பட்டப்படிப்புகளில்‌ கற்றல் முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள்‌, 2024 மற்றும்‌பல்கலைக்கழகங்கள்,. கல்லூரிகளில்‌ ஆசிரியர்கள்‌, கல்விப்‌ பணியாளர்கள்‌ நியமனம்‌ மற்றும்‌ பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள்‌, 2025 ஆகியன தேசிய கல்விக்‌ கொள்கை, 2020-ன்‌ அடிப்படையில்‌ உருவாக்கப்பட்டுள்ளன.


பல்கலைக்கழக நிதிநல்கைக்‌ குழுவின்‌ இத்தகைய நடவடிக்கைகள்‌ இந்திய அரசமைப்புச்‌ சட்டத்தின்‌ அடிப்படைக்‌ கோட்பாடான கூட்டாட்சித்‌ தத்துவத்திற்கு எதிரானது மட்டுமல்ல தமிழ்நாட்டின்‌ உயர்‌ கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்‌ கூடியதாகவும்‌ அமைந்துள்ளது.


தமிழ்நாட்டில்‌ சமூகநீதிக்‌ கோட்பாட்டின்‌ அடிப்படையில் உருவாக்கப்பட்ட வலுவான உயர்‌ கல்வி கட்டமைப்பை இந்த வரைவு நெறிமுறைகள்‌ பாதிக்கும்‌ வகையில்‌ அமைந்துள்ளதாலும்‌, தமிழக இளைஞர்களின்‌ எதிர்காலத்தை கடுமையாகப்‌ பாதிக்கும்‌ என்பதாலும்‌ பல்கலைக்கழக  நிதிநல்கைக்‌ குழுவின்‌ இந்த இரண்டு வரைவு நெறிமுறைகளையும்‌, துணைவேந்தர்‌ நியமனம்‌ தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு நெறிமுறைகளையும்‌ உடனடியாக திரும்பப்‌ பெற வேண்டும்‌ என்று ஒன்றிய அரசின்‌ கல்வித்‌ துறையை இப்பேரவை வலியுறுத்துகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


குளறுபடி நடப்பதில், நம்பர் ஒன் தேர்வு நீட்


தொடர்ந்து பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ’’பொதுத்தேர்வு என்ற பெயரில் அனைவரையும் வடிகட்டி, கல்வி கற்க விடாமல் செய்கின்றனர். கல்வித் துறையில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வதில்லை. குளறுபடி நடப்பதில், நம்பர் ஒன் தேர்வு நீட் தான். நீட் மூலம் மருத்துவக் கனவைச் சிதைக்கும் வேலையைச் செய்து வருகிறார்கள். துணைவேந்தர் நியமனம் மூலம் பல்கலைக்கழகங்களைச் சிதைக்க முயற்சி நடக்கிறது.


மத்திய அரசு தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில்...


பேரவை தீர்மானத்தைப் பார்த்து, மத்திய அரசு தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மக்கள் மன்றத்தையும் நீதி மன்றத்தையும் நாடுவோம்’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


இதைத் தொடர்ந்து இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு உறுப்பினர்கள் பேசிய பிறகு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.