11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வை நடத்துவது குறித்தும் தேர்வு தேதிகள் பற்றியும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
குறிப்பாக பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் , எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும். அதன்படி 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7 முதல் 14ஆம் தேதி வரையிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.15 முதல் 21ஆம் தேதி வரையிலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
மாற்றுத் திறனாளி பள்ளி மாணாக்கருக்கு (Regular candidates) செய்முறைத் தேர்வு நடத்துதல் :
- மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள் எழுதும் உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளி தேர்வர்களது விருப்பத்தின் பேரில் செய்முறை தேர்வின்போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்தல்.
- உடல் இயக்கக் குறைபாடு, பார்வைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளித் தேர்வர்களது விருப்பத்தின் பேரில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் மட்டும், செய்முறைத் தேர்வுக்கு பதிலாக செய்முறை தொடர்பான கொள்குறி வகை வினாக்கள் (Multiple Choice Questions) அடங்கிய வினாத்தாட்கள் வழங்கி செய்முறைத் தேர்வு செய்துகொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம்
முன்னதாக, பள்ளித் தலைமையாசிரியர்கள் பள்ளி மாணாக்கருக்கான செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ள 01.02.2025 முதல் 07.02.2025 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
செய்முறைத் தேர்வு பிப்.7 முதல் 14ஆம் வரையில் நடத்தப்பட உள்ளது. பள்ளித் தலைமையாசிரியர்கள் உரிய ஆவணங்களுடன் செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 17.02.2025- க்குள் ஒப்படைக்க வேண்டும்.
மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் இணையதளம் வாயிலாக செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய 13.02.2025 முதல் 18.02.2025 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/