மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சரித்திர பதிவேடு குற்றவாளி
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தன்காத்திருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி என்பவரது மகன் 35 வயதான கல்யாணசுந்தரம் என்கிற வைரவேல். திருவெண்காடு காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு படித்துவந்த 15 வயது மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமி கொலை
பின்னர் சிறுமி தன்னை அடையாளம் காட்டிவிடக் கூடாது என்பதற்காக அவரை காலால் கழுத்தில் மிதித்துத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்த திருவெண்காடு காவல்துறையினர் கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அப்போதைய திருவெண்காடு காவல்நிலைய காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா விசாரணை செய்ய கல்யாணசுந்தரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
நீதிபதி அதிரடி தீர்ப்பு
இந்த வழக்கின் விசாரணையானது மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை இறுதி விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் சிறுமியை கொலை செய்த கல்யாணசுந்தரம் குற்றவாளி என்பது உறுதியானதை அடுத்து அவருக்கு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கொலை குற்றத்துக்காக ஒரு தண்டனையும் என இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 4,000 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வழக்குரைஞர் ராமசேயோன் மற்றும் திருவெண்காடு காவல்நிலைய காவல் ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் நீதிமன்ற அலுவல் தலைமை காவலர் ஜீவா ஆகியோருக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.