ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமான நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 6 மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் புதிதாக கட்சித் தொடங்கியிருக்கும் விஜய் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.
விஜயின் முடிவு என்ன ?
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய பின்னர் தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெறவுள்ள தேர்தல் என்பதாலும் இந்த இடைத் தேர்தல் தமிழகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும் தேர்தலாக இருக்கும் என்பதாலும் இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கும் என்ற பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
இது பற்றி தனக்கு ஆலோசனை வழங்கும் குழுவினரிடமும் கருத்துகளை கேட்டிருக்கிறார் விஜய். அவர்கள் அளித்த ஆலோசனைகளுக்கு பிறகு ஒரு முக்கியமான முடிவை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எடுத்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பங்கேற்பா அல்லது புறக்கணிப்பா ?
இது குறித்து விஜய் தரப்பு வட்டாரத்தில் விசாரித்தப்போது, ஈரோடு இடைத் தேர்தல் முக்கியமானதாக இருந்தாலும் ஆளுங்கட்சியாக திமுக உள்ளதாலும் காவல்துறை உள்ளிட்ட துறைகள் திமுக அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதனால், ஈரோடு இடைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்க வேண்டாம் என விஜய் முடிவு எடுத்திருப்பதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலை மட்டுமே இலக்கா வைத்து பணியாற்றி, கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டில் அமைக்க அவர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
போட்டியில்லையென்றால் யாருக்கு ஆதரவு?
அதே நேரத்தில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் விஜய் கட்சி போட்டியிடாத நிலையில், தன்னுடைய ஆதரவை திமுகவை எதிர்த்து போட்டியிடும் பலமான கட்சிக்கு கொடுக்கலாமா வேண்டாமா என்பது குறித்தும் விஜய் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த தேர்தலில் ஆளும் திமுக கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் அதிமுகவிற்கு சோதனை அடிப்படையில் தன்னுடைய ஆதரவை அளித்து பார்க்கலாம் என்று விஜய் யோசித்து அது குறித்து ஆலோசித்து வருவதாகவும், இது குறித்து அவர் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லையென்றும் கூறப்படுகிறது.
அதிமுக விஜயின் ஆதரவை கேட்குமா?
மேலும், திமுக கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் ஆதரவை அதிமுக கேட்டால், விஜய் அது குறித்து பரீசிலித்து அந்த கட்சிக்கு ஆதரவு கொடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து உள்ளனர். தன்னுடைய அரசியல் எதிரி தமிழ்நாட்டில் திமுக மட்டுமே என்று பகிரங்கமாக விஜய் அறிவித்துள்ள நிலையில், அந்த கட்சியை எதிர்த்து போட்டியிட உள்ள அதிமுகவிற்கு வாய்ஸ் கொடுப்பாரா அல்லது இல்லையா என்பது இன்னும் சிறிது நாட்களில் தெரிந்துவிடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.