சீர்காழி அருகே மேலையூர் காவிரி கடைமடை கதவனை நீர்த்தேக்கத்தில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் தண்ணீரில் இறங்கிய கூலி தொழிலாளி மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. காவிரி கடைமடை நீரொழிங்கி என்றழைக்கப்படும் இக்கதவனையில் இருந்து சீர்காழி, பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பாசனத்திற்காக காவிரி தண்ணீர் பிரித்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கதவணையின் மேல் பகுதியில் சென்ற உயிர் மின்னழுத்து மின்கம்பி இன்று காலை அறுந்து தண்ணீரில் விழுந்து உள்ளது. இதனால் அங்கு தேங்கி இருந்த தண்ணீர் முழுவதும் உயிர் அழுத்த மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனை அறியாமல் மயிலாடுதுறை மாவட்டம் குரங்கு புத்தூர் கிராமம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் 45 வயதான மகன் கூலி தொழிலாளி சிவமூர்த்தி என்பவர் தண்ணீரில் இறங்கியுள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து சிவமூர்த்தி கதவணை வாய்க்காலில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அவ்வழியே சென்றவர்கள் இதனை கண்டு இதுகுறித்து மின்வாரியம் மற்றும் பூம்புகார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து அங்கு விரைந்து வந்த பூம்புகார் காவல்துறையினர் சிவமூர்த்தி உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததால் அதிலிருந்த மீன்கள், தவளை, பாம்பு உள்ளிட்ட அனைத்தும் உயிரினங்களும் இறந்து மிதந்து வருகிறது.
மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படாதவாறு பழுதடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ள மின்கம்பிகளை அந்தந்த பகுதி மின்வாரிய கம்பியாளர்களை கொண்டு கண்காணித்து, அவற்றை சரி செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.