9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (National Curriculum Framework)  பரிந்துரைப்படி இந்த யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு இந்த வகையில் தேர்வு நடத்தப்படும். 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கு திறந்த புத்தகம் முறையில் தேர்வு (CBSE Open Book Exams) நடத்தப்படும்.


தேர்வுகளை முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்


இவ்வாறு நடத்துவதன் மூலம், மாணவர்கள் தேர்வுகளை முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தைக் கணக்கில் கொள்ளவும் பிறரிடம் இருந்து ஆலோசனைகளைப் பெறவும் முடியும் என்றும் சிபிஎஸ்இ எண்ணியுள்ளதாகத் தெரிகிறது.


சோதனை முறையில் அறிமுகம்


முதல் கட்டமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்தத் திட்டம் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் அடிப்படையாகக் கொண்டு ஜூன் மாதம் இந்தத் திட்டம், முழுமையாக அறிமுகம் செய்யப்படும். முன்னதாக கொரோனா காலத்தில் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறையை அறிமுகம் செய்த டெல்லி பல்கலைக்கழகத்திடம் இருந்து தேவையான அறிவுரை பெறப்படும் என்றும் கூறப்படுகிறது.


சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் நாடு முழுவதும் 29,009 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது.


2 பருவத் தேர்வுகள்


கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு,  மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிவித்தது.


புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்களின்படி, ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த முறை அடுத்த கல்வி ஆண்டில் இருந்தே அறிமுகம் செய்யப்பட உள்ளது நினைவுகூரத்தக்கது.