டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் கிஷோர் பதிவிட்ட கருத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவு குவிந்து வருகிறது. 


2020 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் கிட்டதட்ட 13 மாதங்கள் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்தது. இதனிடையே வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களில் பஞ்சாபில் இருந்து டெல்லி எல்லையை நோக்கி புறப்பட்டனர். அவர்களை ஹரியானா எல்லையில் தடுத்து நிறுத்தி மேலும் முன்னேற விடாமல் போலீசார் முள்வேலி, கான்க்ரீட் தடுப்பு சுவர் உள்ளிட்ட பலவற்றை ஏற்படுத்தினார். ஆனால் விவசாயிகள் தடையை மீறி செல்ல முற்பட்டனர். அவர்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதில் பல விவசாயிகள் காயமடைந்தனர். மத்திய அமைச்சர்களுடன் விவசாய சங்க பிரதிநிதிகள் நடத்திய 4 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது. 


இதனிடையே விவசாயிகள் மேல் நடைபெற்ற தடியடி தாக்குதலில் 21 வயதான சுப்கரன் சிங் என்ற விவசாயி உயிரிழந்தார். இந்நிலையில் டெல்லியில் உரிமைக்காக போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் கிஷோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், “ஜெய் ஜவான் ஜெய் கிசான்.. தங்களது பொருட்களுக்கு நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமா??
குறைந்தப்பட்ச ஆதார விலை என்று ஆட்சிக்கு வந்த கபட அரசியல்வாதிகள் ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் அந்த விவசாயிகள் விளைவித்த உணவை உண்டு உயிரோடு இருக்கும் ஊடகங்களும் அவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்துகின்றன, இவர்களை எப்படி இந்தியர்கள் என்று சொல்ல முடியும்?. விவசாயிகளை தடுக்க சாலைகள் தோண்டப்பட்டது, சுவர்கள் கட்டப்பட்டது, தோட்டாக்கள் வீசப்பட்டது, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது, அனைத்தையும் செய்தது மோடியின் அரசு, தினம் தினம் வார்த்தை மாறும்.


ஆனால் தேச விரோத முத்திரை விவசாயிகளின் தலையில் உள்ளது. முழு நாட்டிற்கும், விவசாயிகளுக்கும் எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடிக்கும், அவரது அரசுக்கும், அவரது தொண்டர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும்.ஆனால், இந்த நன்றிகெட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவு அளிக்கும் நமது கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள்? நமது விவசாயிகள் தேசவிரோதிகள் என்ற முத்திரைக்கு தகுதியானவர்களா??” என கேள்வியெழுப்பியுள்ளார்.