தமிழ் மாதமான மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரம் அன்று புனித தீர்த்தங்களில் நீராடவும், முன்னோர்களுக்கு அளிக்க வேண்டிய தர்ப்பணங்கள் கொடுப்பதற்கும் ஏற்ற நாளாக இந்து மதத்தில் கருதப்படுகிறது. அமாவாசை நாளில் நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து பித்ரு ப்ரீதி செய்து அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும் என்பது ஐதீகம். அதேபோன்று மாசி மகம் அன்றும், புண்ணியஸ்தலங்களிலும், ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் வழங்க மக்கள் கூடுவது வழக்கம்.
ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாளில் ஆறு, குளம் மற்றும் கடலில் புனிதநீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, கோயில்களில் சாமி தரிசனம் செய்தால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் இதேபோன்று மாசி மகதன்றும் வழிபாடு நடைபெறுகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், காவிரி ஆறும், கடலும் சங்கமிக்கும் இடம் மற்றும் பிரசித்திபெற்ற காவிரி துலா கட்டத்திலும் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசை, மாசி மகம் போன்ற நாட்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பூம்புகார் சங்கமத்துறைக்கும், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலும் ஏராளமானோர் படை எடுப்பார்கள். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு ஓடுகின்றது. காசிக்கு நிகராக மயிலாடுதுறை காவிரி துலாகட்டம் திகழ்கிறது. ஐப்பசி மாதம் முழுவதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி புனிதமடைந்ததாக வரலாறு.
இங்கு 16 தீர்த்த கிணறுகள் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலா கட்டத்தில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளயபட்சம், மத்தியாஷ்டமி, மாசி மகம் உள்ளிட்ட காலங்களில் இங்கு நீராடி, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி உள்ளிட்ட பலிகர்ம பூஜைகள் சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லாத நிலையில் புனித துலா கட்ட புஷ்கர தொட்டியில் பொதுமக்கள் புனித நீராட மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் அப்பர் சுந்தரர் கூறுகையில், மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த பகுதியாகும். கங்கை தன் பாவத்தை போக்குவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி பகுதியில் வாசம் செய்வதாக ஐதீகம். அதனடிப்படையில் சிறப்பும் புண்ணியமுமிக்க பகுதியான மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி கரைகளில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தின் பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து தங்கள் முன்னோருக்கு நீர்த்தார் கடன் எனப்படும் தர்ப்பணம் செய்து புனித நீராடும் நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.
வரும் 24 -ஆம் தேதி சனிக்கிழமை மாசி மக தினத்தில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி பகுதிக்கு வருகை தரும் மக்களின் வசதிக்காக தற்பொழுது காவிரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால் துலாக் கட்ட பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள போர்வெல் வாயிலாக தொட்டியில் தண்ணீர் திறந்து விடவும் கடந்த ஐப்பசி மாதம் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் ஏற்படுத்திய பொது மக்கள் புனித நீராடிட ஏதுவாகவும் தண்ணீர் வசதி குழாய்கள் மூலம் செய்திட வேண்டும். மேலும் அப்பகுதி முழுவதும் குப்பை கூலங்களை அகற்றி தூய்மைப் படுத்திடவும், மகா மகத்தினத்தில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்திடவும், பொதுமக்களுக்கான நடமாடும் தற்காலிக கழிவறைகள் அமைத்து தரவும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.