திருவாதிரை திருநாளை முன்னிட்டு குத்தாலம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகுபகவான் சுவாமி கோயிலின் உபகோயிலான தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக் கூத்தராகிய ஸ்ரீ நடராஜப் பெருமான் உலகில் மிகப் பெரிய வடிவமாக எட்டரை அடி உயரம் கொண்டு, காண்போரை சுண்டி இழுக்கும் நர்த்தன சுந்தர நடராஜராக விளங்குகிறார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் கடந்த 28 -ஆம் தேதி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. கோயிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தது. திருவாதிரை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு தேகசௌந்தரி அம்பாள் உடனுறை நடராஜ பெருமானுக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், சர்க்கரை, தேன், பழவகைகள் கொண்டு சோடஷ அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் திராட்சை மாலை, நகைகள், உத்திராட்சமாலை, வண்ணமலர் மாலைகள், புலித்தோல் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து சுவாமிக்கு யாகசாலையில் இருந்து ரட்சை பெற்று வைக்கப்பட்டு சோடஷ உபச்சாரமும், மேளதாளம் முழங்க மகாதீபாராதனையும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. பூஜைகளை சதாசிவம் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் செய்தனர். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
குத்தாலம் ஸ்ரீ ஓம் காளீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜப் பெருமானுக்கு மகாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் சமயகுரவர்கள் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புக்குரிய தலமான ஆனந்தவல்லி சமேத ஓம் காளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. காளிதேவி குத்தாலத்தில் சிவனை வேண்டி கோயில் அமைத்து நீண்ட காலம் வழிபாடு நடத்தியதன் பலனாக, மான், மழு தரித்து, சிவ கணங்களோடு சிவபெருமான் அங்கு தோன்றி காளி தேவியோடு திரு நடனம் புரிந்ததாக வரலாறு கூறுகிறது.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜ பெருமான் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ருத்ரஹோமம், பாராயணம் பூர்ணாகுதி ஸ்ரீ ஓம் காளீஸ்வரர் 1008 சங்காபிஷேகம், ஸ்ரீ ஆனந்தவள்ளிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ நடராஜர் பெருமானுக்கு பால், பழம், பன்னீர், தேன் உள்ளிட்ட சகல விதமான திரவியங்களால் மகாபிஷேகம் புஷ்பாஞ்சலி தீபாராதனை நடைபெற்றது. ஆருத்ரா தரிசனம் வீதி உலா திருஉடல் திருவெம்பாவை பதிகம் ஓதுதல் நடைபெற உள்ளது.