மயிலாடுதுறையில் உள்ள கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
புராண காலத்தில் முனிவர்கள் சிலர் சிவ பெருமானுக்கு எதிராக வேள்வி நடத்தினர். அவர்கள் இல்லங்களுக்கு யாசகம் கேட்பவர் போல சிவ பெருமான் மீது சென்றார். அப்போது முனிவர்கள் புலி, உடுக்கை, நாகம் போன்ற பலவற்றை யாகத்தில் உருவாக்கி, அவற்றை ஏவி விட்டனர். அவற்றை தனது அணிகலன்களாக சிவ பெருமான் ஆக்கிக் கொண்டார். முனிவர்கள் ஏவி விட்ட யானையை மிதித்து பாதாளத்தில் அழுத்தி, ஒரு காலை தூக்கி, தனது விஸ்வரூப தரிசனத்தை காட்டினார்.
இதனைக் கண்டு பிரமித்து போன முனிவர்கள் மனம் திருந்தினர். தங்கள் ஆவணத்தை விட்டு சிவபெருமானிடம் சரணடைந்தனர். இந்த காட்சியை உலக மக்களும் காண வேண்டும் என சிவ பெருமானிடம் வேண்டிக் கொண்டதன் காரணமாக மார்கழி திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன நிகழ்வு கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை என்ற நிலையில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாள் அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு மார்கழி மாதத்துக்கான ஆருத்ரா தரிசனம் நிகழ்வு இன்று நடைபெற்றது. பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஆகாய தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசனம் நிகழ்வு தொடங்கியது. இதேபோல் மற்ற சிவாலயங்களிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இதனிடையே மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரத்தில் திருநாகேஸ்வரம் ராகு பகவான் சுவாமி கோயிலின் உபகோயிலாக தேகசௌந்தரி அம்பாள் உடனுறை உமாமகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு திருவாதிரையை முன்னிட்டு உலகில் மிக பெரிய வடிவமான புகழ்பெற்ற எட்டரை அடி உயர நடராஜபெருமான் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பால், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், உள்ளிட்டவை கொண்டு சோடஷ அபிஷேகம் செய்யப்பட்டு, திராட்சை மாலை, ஆபரணங்கள், ருத்ராட்ச மாலை, புலித்தோல், பட்டாடை அணிவிக்கப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தரிசனம் செய்து வருகின்றனர். ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியை முன்னிட்டு கோயிலை சுற்றி பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.