Pro Kabaddi 2023 Tamil Thalaivas: ப்ரோ கபடி லீக் 2023 இன் 44வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோத உள்ளது. சென்னையில் உள்ள  நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள SDAT மைதானத்தில் இன்று அதாவது டிசம்பர் 27 புதன்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் தபங் டெல்லி அணிகள் மோதவுள்ளது. 


தமிழ் தலைவாஸ் அணி சென்னையில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது. சொந்த மண்ணில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு களமிறங்கிய தமிழ் தலைவாஸ் அணி வெற்றிகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோது சொந்த மண்ணில் தமிழ் தலைவாஸ் அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தது ரசிகர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி தனது சொந்த மண்ணில் இன்று தனது கடைசி லீக் போட்டியில் களமிறங்குகின்றது. இதில் பலமான குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியினை எதிர்கொள்ளவுள்ளது. சொந்த மண்ணில் கடைசி லீக் போட்டி என்பதாலும், தமிழ்நாடு ரசிகர்கள் முன்னிலையில் ஒரு வெற்றியாவது அடைந்து அவர்களை திருப்தி படுத்தவேண்டும் எனவும் தமிழ் தலைவாஸ் அணி இன்று களம் காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


தமிழ் தலைவாஸ் அணியைப் பொறுத்தவரையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 11 புள்ளிகளுடன் 11வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் ஒரு ஹாட்ரிக் தோல்விக்குப் பின்னர் கடந்த போட்டியில் பலமான யு.பி. யோதாஸ் அணியை 38-30 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.


குஜராத் அணியைப் பொறுத்தவரையில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 23 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. 


தமிழ் தலைவாஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ் - அணிகளில் இன்று களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் வீரர்கள்


தமிழ் தலைவாஸ் : சாகர் (கேப்டன்), நரேந்தர் ஹோஷியார், ஹிமான்ஷு நர்வால், எம். அபிஷேக், ஹிமான்ஷு, சாஹில் குலியா மற்றும் ஆஷிஷ். தமிழ்நாட்டினைச் சேர்ந்த செல்வமணி இன்றைய போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. 


குஜராத் ஜெயண்ட்ஸ் : ஃபாசல் அட்ராச்சலி (கேப்டன்), சோனு ஜக்லன், ரோஹித் குலியா, ரவிக்குமார், பாலாஜி டி, ராகேஷ் மற்றும் சோம்பிர்


நேரடி ஒளிபரப்பு 


இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 எச்டி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 எச்டி இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் & ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 போன்ற தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. 


இதுமட்டும் இல்லாமல் ஓடிடி தளங்களில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. மேலும் வலைதளங்களில் ஏபிபி நாடு வலைதளத்தில் போட்டி குறித்த லைவ் அப்டேட்களைக் காணலாம்.