மயிலாடுதுறை அருகே பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டி தருவதாக பணத்தைப் பெற்றுக் கொண்டு கதவு, ஜன்னல், தரை என ஏதும் செய்யாமல் வீட்டை பாதியில் விட்டு சென்ற ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு வீட்டை முழுமையாக கட்டித்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம்
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் என்பது ஊரகப்பகுதியில், அனைத்து வீடற்ற, குடிசை அல்லது பாழடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டது. 269 சதுர அடியில் வீடுகள் கட்டப்படுகிறது. ஒரு வீட்டிற்கான மொத்த மதீப்பீட்டுத்தொகை 2 லட்சத்து 77 ஆயிரத்து 290 ரூபாய் ஆகும். இதில் மத்திய அரசு 40 சதவீதமும், மாநில அரசு 60 விழுக்காடு தொகையும் என முழுவதும் இணையதளத்தின் வழியாக (PFMS) பயனாளிகள் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
நடைமுறைகள்
இந்த தொகை அனைத்தும் தொடர்புடைய வட்டாரங்களுக்கு விடுவிக்கப்படுகிறது. மேலும் இந்த தொகையில் சிமெண்ட், கம்பி, கதவு, ஐன்னல் மற்றும் லோகோ டைல்ஸ் ஆகியவற்றிற்கான தொகை முழுவதும் வட்டாரங்களில் பிடித்தம் செய்யப்பட்டு, மீதம் உள்ள தொகை பயனாளிகளுக்கு விடுவிக்கப்படுகிறது.
IBPS PO Recruitment 2024: டிகிரி முடித்தவரா? வங்கி வேலை - 4,455 பணியிடங்கள் - உடனே விண்ணப்பிங்க!
பயனாளிகள் தேர்வு
பயனாளிகள், சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பின்படி (SECC) தகுதியுள்ள பயனாளிகள் பட்டியலில் முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் தோ்வு செய்யப்படுகின்றனர். இனவாரி ஒதுக்கீட்டில் 60 விழுக்காடு, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினருக்கும் மீதமுள்ள 40 விழுக்காடு மற்றும் இதர வகுப்பினருக்கும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்கள், ஆதரவற்ற விதவைகள், பெண்களை குடும்பத் தலைவியாகக் கொண்ட குடும்பங்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஆகியோருக்கு வீடுகள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள், குறைந்தபட்சம் 25 சதுர மீட்டா் பரப்பில் ஒரு சமையலறை, ஒரு படுக்கையறை மற்றும் கழிப்பறை வசதியுடன் கட்டப்பட வேண்டும்.
மயிலாடுதுறையில் முறைகேடு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா விளாகம் கிராமத்தில் பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்று சாருமதி, கலைவாணி, இந்திராணி, சந்திரா, ராமா, சித்ரா, ராணி, அஞ்சம்மாள் மற்றும் பானுமதி ஆகியோர் வீடு கட்டி வருகின்றனர். இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மூலமாக வீடு கட்டி தருவதாக கூறி அரசு வழங்கிய பணத்தை தங்களிடமிருந்து பெற்றுக் கொண்டு ஆக்கூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் குமரேசன் என்பவர் ஏமாற்றி விட்டதாக புகார் மனு அளித்துள்ளனர்.
TN Rain Alert: தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கு; எங்கெல்லாம் தெரியுமா?விவரம்!
மேற்கூரை அமைக்கப்பட்ட நிலையில், கதவு, ஜன்னல் வைக்காமலும், தரை மற்றும் வீட்டை பூசாமல் தங்களிடம் மொத்த பணத்தையும் வாங்கி ஒப்பந்ததாரர் குமரேசன் ஏமாற்றுவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களின் வீட்டை முழுமையாக கட்டி கொடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.