மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரப்பாடி மீனவர் கிராமத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, விழா மீனவர்கள் மத்தியில் உரையாற்றியனார்.


மீனவர்கள் மத்தியில் அமைச்சர் 


அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சந்திரப்பாடி கிராமத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன் இறங்குதளத்தை திறந்து வைத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் படகு அணையும் துறை, மீன் ஏலக்கூடம், வலைப்பின்னும் கூடம், கான்கிரீட் சாலை வசதி, தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் மீனவர்கள் தங்கள் படகுகளை புயல் மற்றும் இயற்கை பேரிடர்களிடமிருந்து சேதமடையாமல் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க முடியும். சுகாதாரமான முறையில் மீன்களை விற்பனை செய்வதற்கும் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பாக பின்னுவதற்கும் வழிவகை செய்யப்படும். மீன்பிடி தொழில் ஊக்குவிக்கப்படும். 




மீனவர் மக்கள் நல சார்ந்த திட்டங்கள் 


தமிழ்நாடு முதலமைச்சர் மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அதிக நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். மீன்பிடி தடைக்காலத்தில் ரூபாய் 5 ஆயிரமாக இருந்ததை 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தந்துள்ளார். மீனவ மக்களை பாதுகாக்க பல திட்டங்களை தந்துள்ளார். அதில் முக்கியமானது கடற்கரையின் முகத்துவார பகுதிகளில் தடுப்பணையை அமைத்து தந்திருக்கின்றார். சந்திரபாடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு வரைக்கும் என்னென்ன கோரிக்கைகள் வைத்துள்ளீர்களோ அதை அத்தனையும் கவனமாக நமது தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். இந்த மீன்பிடி ஏலக்கூடம் ரூபாய் 66 லட்சம் மதிப்பீட்டிலும், வலைபின்னும் கூடம் 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், படகணையும் தளம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளார். 




கடல் மட்டம் உயர்வதை தடுக்க நடவடிக்கை 


7 இடங்களில் உயர்மின் விளக்குகள் வேண்டும் என்று நீங்கள் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, அது புதுப்பட்டினத்தில் பழையாறு, திருமுல்லைவாசலில் தொடுவாய், பெருந்தோட்டத்தில் நாயக்கன்குளம் ஆகிவைகளில் அமைத்து அதை செயல்படுத்தி உள்ளார். கபடிக்கான உள்அரங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்வதை தடுப்பதற்கு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 




அதிமுக்கியமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 


பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் 1 கோடியே 17 லட்சம் குடும்பத்தலைவிகள் மாதா மாதம் 1000 ஆயிரம் ரூபாய் பெற்று வருகின்றனர். இப்படிப்பட்ட மகத்தான திட்டத்தை தந்தவர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் மட்டுமே. நாம் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் எனவும், தினந்தோறும் 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்கும் தமிழக முதல்வருக்கு நாம் என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும்" என்றார்.


 


இந்நிகழ்ச்சியில், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, மீன்வளத்துறை செயற்பொறியாளர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரபீயா நர்கீஸ் பானு, ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வம், சந்திரபாடி ஊராட்சிமன்றத்தலைவர் பிரமிளா, மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.