தமிழ்நாட்டில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஆக.21) ஆன்லைனில் தொடங்கியது.
முன்னதாக நாடு முழுவதும் ஆகஸ்ட் 14 முதல் இளநிலை மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது. அகில இந்திய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
1.2 லட்சம் இடங்களுக்கு 23 லட்சம் பேர் போட்டி
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சுமார் 1.2 லட்சம் இளநிலை மருத்துவப் படிப்புகள் மொத்தமாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப சுமார் 23 லட்சம் மாணவர்கள் 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை எழுதினர்.
தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை இடங்கள்?
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளைப் பொறுத்தவரை 9,800 எம்பிபிஎஸ், 2150 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 43 ஆயிரத்து 63 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 2,721 விண்ணப்பங்கள் கூடுதலாக பெறப்பட்டுள்ளன. அரசுக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில், 6,630 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
அதேபோல அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 3,733 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களுக்கு 495 மருத்துவ இடங்களும் 125 பல் மருத்துவ இடங்களும் உள்ளன. இந்த இட ஒதுக்கீட்டில், 669 மதிப்பெண்களைப் பெற்று சென்னையைச் சேர்ந்த ரூபிகா முதலிடம் பெற்றுள்ளார். சைதாப்பேட்டை நீட் கோச்சிங் மையம் தொடங்கிய முதல் ஆண்டிலேயே அதில் படித்த 4 மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் முதல் 10 இடங்களில் வந்துள்ளனர்.
ஆன்லைனில் தொடங்கிய கலந்தாய்வு
இந்த நிலையில், தமிழ்நாட்டில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஆக.21) ஆன்லைனில் தொடங்கியது. நாளை சிறப்புப் பிரிவினர், 7.5% இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதில் 669 நீட் மதிப்பெண்கள் முதல், 494 மதிப்பெண்கள் வரை பெற்ற அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த மாணவர்களுக்குக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. மதியம் பிசி முஸ்லிம், எஸ்சி, எஸ்சி அருந்ததியர், எஸ்டி மாணவர்களுக்கு, 441 முதல் 360 வரை மதிப்பெண்கள் பெற்றதன் அடிப்படையில் கலந்தாய்வு தொடங்கி நடக்க உள்ளது.
இந்த கலந்தாய்வு, நேரடியாக சென்னை, ஓமந்தூரார் அரசு எஸ்டேட் வளாகத்தில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மஎருத்துவமனையில் நடக்க உள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு: www.tnmedicalselection.org, www.tnhealth.tn.gov.in
தொலைபேசி எண்கள்: 044 – 28361674 / 044 – 28363822 / 044 - 28364822 / 044 - 28365822 / 044 – 28366822 / 044 - 28367822 / 044 – 29862045 / 044 – 29862046
இமெயில் முகவரி: tnmedicaledu2024@gmail.com