மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம் என்பவரின் மகன் 40 வயதான கலைவாணன். இவர்மீது 4 கொலை வழக்குகள், 7 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் அடிதடி உள்ளிட்ட 20 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
துண்டான விரல்கள்:
பிரபல ரவுடியான இவர் நேற்று இரவு 8.30 மணியளவில் அவரது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக நாட்டுவெடிகுண்டு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டுவெடிகுண்டு வெடித்ததில் கலைவாணனின் இரண்டு கைகளிலும் உள்ள 10 விரல்களும் துண்டானது. மேலும், மார்பு, தொடைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கலைவாணன் மேல் சிகிச்சைக்காக தற்போது தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணை:
மேலும் இது குறித்து நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சூழலில் தற்போது கலைவாணன் வீட்டின் அருகில் வெளிநபர்கள் யாரும் செல்லாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பட்டைகளை கட்டி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து அகிலன், திருவாரூர் மாவட்டத்திலிருந்து முகிலன் ஆகிய இரண்டு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. கலைவாணன் வீட்டு வாசலில் இறக்கி விடப்பட்ட இரண்டு நாய்களும் சிறிது தூரம் ஓடி அவருடைய வீட்டின் எதிர்ப்புறம் உள்ள கிரவுண்டில் உள்ள குப்பைமேட்டின் அருகில் சென்று நின்று விட்டன.
இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் தன் மீது நாட்டுவெடிகுண்டை வீசி சென்றதாக கலைவாணன் வாக்கு மூலம் அளித்துள்ளார். தன் நாட்டு வெடிகுண்டு தயார் செய்தது காவல்துறையினருக்கு தெரிந்துவிட கூடாது என இதுபோன்று கூறியுள்ளார் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் கலைவாணன் வெடிகுண்டு தயாரித்தபோது குண்டு வெடித்து, கைவிரல்கள் துண்டானது தெரியவந்திருக்கிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் முக்கிய பிரமுகர் ஒருவரை கொல்ல திட்டமிட்டு கலைவாணன் வெடிகுண்டு தயாரித்திருக்கலாம் என்றும், இந்த ரகசிய திட்டம் வெடிகுண்டு வெடித்ததால் வெளியே தெரிந்துவிட்டதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
கொலை செய்ய சதித்திட்டம்:
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், இவர் 60 நாட்டு வெடிகளை வாங்கி அதில் இருந்த மருந்தை வெளியே எடுத்து பால்ரஸ், ஆணி உள்ளிட்டப் பொருட்களை அடைத்து வெடிகுண்டுகளை தயாரித்திருக்கிறார். அப்போது 2 குண்டுகளை செய்து முடித்துவிட்டு 3 வது குண்டு தயாரிக்கும்போது வெடித்து சிதறியுள்ளது. ஏற்கனவே தயாரித்த 2 வெடிகுண்டுகளை அவரது மனைவியிடம் இருந்து கைப்பற்றி, அவரையும் வழக்கில் குற்றவாளியாக சேர்த்துள்ளோம். யாரை கொலை செய்ய வெடிகுண்டுகளை செய்தார்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்’ என்றனர்.
Namakkal: வெல்ல ஆலை குடிசைகளுக்கு தீ வைப்பு.. வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம்.. என்ன நடந்தது?
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற