திருத்துறைப்பூண்டியில் பூட்டியிருந்த மருத்துவரின் வீட்டை உடைத்து 250  சவரன் தங்க நகை  ரூ 7  லட்சம்  ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ரயில்வே நிலையம் அருகே, பிரேம்குமார் என்ற குழந்தைகள் நல மருத்துவர் வசித்து வருகிறார். இவரது வீடும் மருத்துவமனையும் ஒரே வளாகத்தில்  உள்ளது. பிரேம்குமாரின் மகள் கிரன்பொன்மலர்  சென்னையில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இதனால், பிரேம்குமாரின் மனைவி விஜிலாவும், அவரது மகளும்  சென்னையில் வசிந்து  வருகின்றனர். 

 

இந்நிலையில், பிரேம்குமார் தனது மருத்துவமனைக்கு விடுமுறையளித்துவிட்டு, வீட்டையும், மருத்துவமனையும் பூட்டி விட்டு, நேற்று இரவு சென்னை  சென்றார். இந்த நிலையில் இன்று காலை பிரேம்குமார் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு  உடைக்கப்பட்டு, கதவு  திறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருத்துறைப்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிரேம்குமாருக்கும் தகவல் அளித்தனர். நிகழ்விடத்துக்கு வந்த திருத்துறைப்பூண்டி போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அவரது அறையில் இருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் உள்ள பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது .

 

பிரேம்குமாரை  போலீசார் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த லாக்கரில் ரூ. 7 லட்சம்  ரொக்க பணம், மற்றும் 250 பவுன் தங்க நகை, மேலும் இதர வைர நகைகள் வைத்திருந்ததாகவும், தெரிவித்தார். மகளின் மருத்துவ படிப்பு செலவுக்காக திருவாரூரில் உள்ள மூன்று பிளாட்டுகளை விற்பனை செய்து ரூ 40 லட்சம் ரொக்க பணத்தை மற்றொரு அறையில் உள்ள லாக்கரில் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அந்த லாக்கர் உடைக்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை.

 

மேலும் சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு பிரேம்குமார் விரைந்து வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே,  அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். தடவியல் சோதனை மற்றும் மோப்பநாய் சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக திருவாரூர் பொறுப்பு எஸ்பி ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.