பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 100 கோடி வசூலைக் குவித்து 100 க்ரோர் க்ளப் படங்களில் இணைந்துள்ளது.


32ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டனரா?


விபுல் ஷா தயாரிப்பில், ஆவணப்பட இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. 


நடிகைகள் சித்தி இத்னானி, தேவதர்ஷினி, அடா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி ஆகியோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நாடு முழுவதும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.


கேரளாவில் இருந்து மதமாற்றம் செய்து திருமணம் செய்து அழைத்துச் செல்லப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்படும் பெண்களைப் பற்றியது இப்படத்தின் கதை எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 32 ஆயிரம் பெண்கள் பாதிக்கப்பட்டதாக ட்ரெய்லரில் முதலில் தெரிவித்து பின் எதிர்ப்புகள் காரணமாக 3 என எண்ணிக்கை குறைக்கப்பட்டது


குவிந்த கண்டனங்கள், பாராட்டிய பிரதமர்!




ஆனால் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் மேலோங்கி இருப்பதாகவும், கேரள மாநிலத்துக்கு எதிரான கருத்துகளை விதைக்கும் பிரச்சார படம் என்றும் தொடர்ந்து கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வந்தன.


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் என பல அரசியல் தலைவர்கள் தொடங்கி இப்படத்துக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், பிரதமர் மோடி தொடங்கி பாஜகவினர் பலரும் தீவிரவாதத்துக்கு எதிரான படம் தி கேரளா ஸ்டோரி என முன்மொழிந்து பாராட்டினர். மேலும், கேரளா போன்ற அழகிய மாநிலத்தில் பயங்கரவாதம் எவ்வளவு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது என இந்தப் படம் கூறுவதாகவும், இந்தப் படத்துக்குத் தடை கோரி, காங்கிரஸ் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவ முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.


100 கோடி வசூல்!


இந்நிலையில் பல சர்ச்சைகளுக்கு நடுவே தி கேரளா ஸ்டோரி திரைப்படம் முதல் பத்து நாள்களில் 100 கோடிகள் வசூலைக் குவித்துள்ளது. 


பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களைப் பகிரும் sacnilk தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்களின்படி, தி கேரளா ஸ்டோரி திரைப்படம் முதல் நாள் 8.03 கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 11.2 கோடிகளும், மூன்றாம் நாள் 16.4 கோடிகளும், நான்காம் நாள் 10.07 கோடிகளும், ஐந்தாம் நாள் 11.14 கோடிகளும், ஆறாம் நாள் 12 கோடிகளும், ஏழாம் நாள் 12.5 கோடிகளும், எட்டாம் நாள் 12.35 கோடிகளும், ஒன்பதாம் நாள்19.5 கோடிகளும், பத்தாம் நாள் தோராயமாக 22 கோடிகளும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் இந்தியாவில் மட்டும் இப்படத்தின் வசூல் 134.99 கோடி வசூலை எட்டியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தடை கோரிய மாநில அரசுகள்




திரைப்படம் தாண்டி அரசியலாக்கப்பட்ட தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு முன்னதாக கேரளா, தமிழ்நாடு அரசுகள் தடை கோரின. ஆனால் உச்ச நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் படத்துக்கு தடை விதித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். மேலும் இப்படத்துக்கு பாஜக நிதியுதவி அளித்ததாகவும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட இந்த முடிவை எடுத்ததாகவும் மம்தா தெரிவித்திருந்தார். 


தமிழ்நாட்டில் முதல் இரண்டு நாள்களுக்குப் பிறகு தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படாது என மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.


எதிர்க்கலாம்; ஆனால் தடை கோராதீர்கள்!


மற்றொருபுறம், தி கேரளா ஸ்டோரி படத்தை முன்னதாக பார்த்து ரசித்த உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினார். மேலும், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட்  மாநிலங்களில் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. 




இந்நிலையில், பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளைத் தெரிவித்து வரும் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இந்தப் படத்துக்கு ஆதரவாகவும் கருத்து சுதந்திரத்தை வலியுறுத்தியும் பேசியிருந்தார்.“ஒரு படத்தை ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம் ஆனால், தடை விதித்தது தவறு" எனக் குறிப்பிட்டிருந்தார்.


இந்நிலையில், ஷாருக்கான் நடித்த ’பதான்’, ரன்பீர் கபூர் நடித்த ’தூ ஜூட்டி மெய்ன் மக்கார்’, சல்மான் கான் நடித்த  ‘கிஸி கா பாய் கிஸி கா ஜான்’ ஆகிய படங்களின் வரிசையில் இந்த ஆண்டு 100 கோடி வசூலை எட்டிய நான்காவது பாலிவுட் படமாக ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் உருவெடுத்துள்ளது.