நாமக்கல் மாவட்டத்தில் வெல்ல ஆலை குடிசைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை உள்ளது. இங்கு பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் அருகே குடிசை அமைத்து தங்கி வந்தனர். இதனிடையே நேற்று இரவு தொழிலாளர்களின் குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த தீ விபத்தில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் எரிந்து சேதமானது.
இந்த தீ விபத்தில் குடிசைக்குள் தூங்கி கொண்டிருந்த 4 வட மாநில தொழிலாளர்களில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீக்காயங்களுடன் கிடந்த 4 பேரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே கரப்பாளையத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி பட்டதாரி பெண் ஒருவர் ஆடு மேய்க்க சென்ற போது, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது இரு பிரிவினரிடையே மோதலாக வெடித்தது.
கைது செய்யப்பட்ட சிறுவன், தான் கரும்பு வெட்டும் வேலைக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வந்ததாகவும், அந்தப் பெண்ணைக் கண்டதும் தனக்கு சபலம் ஏற்பட்டு திட்டமிட்டு அவரை வன்கொடுமை செய்து கொன்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரிவித்ததாக கூறியுள்ளார். அதன்பிறகு அந்த சிறுவனை ஜேடர்பாளையம் போலீசார் சிறையில் அடைத்தனர்.
அதேசமயம் கைது செய்யப்பட்டுள்ள அந்த சிறுவன் இதைச் செய்திருக்க மாட்டான் என்று ஊர் மக்கள் தெரிவித்திருந்தார்கள். இதனால் தொடர்ச்சியாக வெல்லம் தயாரிக்கும் ஆலையின் குடிசைகள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது. அதற்கு மாறாக மற்றொரு பிரிவினர் சார்ந்த ஆலைக் கொட்டகை மற்றும் அவர்களைச் சார்ந்த பல்வேறு இடங்களில் தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.