கொலை வழக்கில் ஜாமீனில் உள்ள வரிச்சியூர் செல்வத்துடன் நிபந்தனை ஜாமீனில் உள்ள டி.டி.எஃப் வாசன் சந்திப்பு. ஜெயில் அனுபவம் குறித்து பேசி வரிச்சியூர் செல்வத்தின் அறிவுரை கேட்ட டி.டி.எஃப் வாசன்  - சர்ச்சைக்குரிய வீடியோ ட்ரெண்ட்.

 

வரிச்சியூர் செல்வம்

 


மதுரை மாவட்டம் வரிச்சூர் கிராமத்தை சேர்ந்த செல்வத்தின் துவக்க காலம், ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து என்று இருந்தது. பிந்நாட்களில் அவர் மீது நிறைய வழக்குகள் வர, அதை எதிர் கொள்வதில் அவருக்கான காலம் ஓடியது. ஒரு கட்டத்தில் எல்லாம் போதும் என ஒதுங்கி நிற்கும் வரிச்சியூர் செல்வம், இன்றும் ரவுடியாகவே அறியப்படுகிறார். ஆனால், அதை விரும்பாத அவர், கோயில் விழாக்களுக்கு செல்வது, உறவினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கு செல்வது என ஒரே குஷி மோடில் பயணித்துக் கொண்டிருக்கிறார். தற்போது வரிச்சியூர் செல்வம் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் இருந்து வருகிறார். இந்நிலையில் ஜாமீனில் உள்ள வரிச்சியூர் செல்வத்தை பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசன் சந்தித்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

 

டி.டி.எஃப் வாசன் - வரிச்சியூர் செல்வம்

 

டி.டி.எஃப் வாசன் காரை அஜாக்கிரதையாக இயக்கியதாக, மதுரை அண்ணா நகர் காவல் துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் 10 நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்து இடவேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் அளித்துள்ளது. இந்நிலையில் அண்ணா நகர் காவல் நிலையத்தில், டி.டி.எஃப் வாசன் கையெழுத்திட்டு வருகிறார். மதுரையில் தங்கியுள்ள டி.டி.எஃப் வாசன் கொலை வழக்கு ஒன்றில் ஜாமீனில் உள்ள வரிச்சியூர் செல்வத்தை சந்தித்து, அவர் சமைத்துக் கொடுத்த உணவை ருசித்து சாப்பிட்டார். மேலும் ஜெயில் அனுபவம் குறித்து பேசினர். அப்போது பேசிய டி.டி.எஃப்வாசன் ”நான் ஜெயிலில் இருந்தபோது பல்வேறு நபர்களை சந்தித்தேன். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது சொந்த வாழ்நாளில் அனுபவித்ததையும், இனி இதுபோல் செய்யக்கூடாது” என்ற பல அறிவுரைகளை வழங்கினார்கள்.

 

அதுபோல உங்களுக்கு உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாதது சம்பவம் எது என கேள்வி எழுப்பிய போது ”கும்பகோணம் குழந்தைகள் தீ விபத்து எனது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம்” என்றும் அனைவரிடமும் நட்பாக பழகுவேன் இதுதான் என்னுடைய குணம்., எனவும், வரிச்சியூர் செல்வம் டி.டி.எஃப் வாசனுக்கு அறிவுரை வழங்கினார். இந்நிலையில் அதற்கு நன்றி தெரிவித்த வாசன் பேசும் வீடியோவை வரிச்சியூர் செல்வம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொலை வழக்கில் ஜாமீனில் உள்ள வரிச்சியூர் செல்வமும், நிபந்தனை ஜாமீனில் உள்ள டி.டி.எஃப் வாசனும் சந்தித்து பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய பேசுபொருளாக மாறியுள்ளது.