உசிலம்பட்டி அருகே இல்ல விழாவிற்கு சென்ற தாய்மாமன் ஊர்வலத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசு விபத்தில் இரு சிறுமிகள் உள்பட 8 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் மற்றும் விபத்தின் சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

உசிலம்பட்டி விசேஷ வீட்டு விழாவில் பட்டாசு

 

மதுரை உசிலம்பட்டி பகுதியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் கல்யாணம், காது குத்து, இல்ல விழா, வசந்த விழா, சடங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் சிறப்பாக கொண்டாடுவார்கள். மொய்ப் பணம், கிடாய் விருந்து உள்ளிட்ட விஷயங்களில் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதேபோல் மேள தாளம், கொட்டு, பட்டாசுகள் என்ற பிரமாண்டமும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இப்படியான நிகழ்வில் பட்டாசுகளை சிலர் ஆபத்தான முறையில் கூட்டத்திற்குள் தூக்கி வீசியும் விளையாடுவார்கள்.

 

இந்நிலையில் இல்லவிழா நிகழ்ச்சி ஒன்றில் வெடிக்கப்பட்ட பட்டாசால் விபத்து ஏற்பட்டதில் இரு சிறுமிகள் உள்பட 8 பெண்கள் படுகாயமடைந்த சம்பவம் மற்றும் விபத்தின் சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தாய்மாமன் ஊர்வலத்தில் பட்டாசு

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்த பிரபுநாதன் என்பவரின் இல்ல விழா, மெய்யணம்பட்டி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த இல்ல விழாவிற்காக அன்னம்பாரிப் பட்டியிலிருந்து தாய்மாமனான வைரமுத்து என்பவரது தலைமையில் பட்டாசு வெடித்த வண்ணம் ஊர்வலமாக மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.

 

கருப்புக் கோயில் அருகில் இந்த ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது, பட்டாசு ஊர்வலத்திற்குள் வெடித்தில் ஊர்வலத்தில் வந்த இரு சிறுமிகள் உள்பட சத்யா, செல்வி, நித்யா, சானியா, பூங்கனி, திலகவதி, வைரசிலை என்ற 8 பேர் படுகாயமடைந்தனர்.

 

பெண்கள் பதறி ஓடும் சி.சி.டி.வி., காட்சிகள்

 

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாய்மாமன் ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தவுடன் பெண்கள் பதறி ஓடும் சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார், இல்ல விழா நடத்தியவர்கள், பட்டாசு வெடித்தவர்கள் என 10-க்கும் மேற்பட்டோரை காவல் நிலையம் அழைத்து வந்து, இந்த விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,