மகளிர் இலவச பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படும் அண்ணா பஸ்ஸ்டாண்டில் - ஒரு பாத்ரூம் இல்ல, குடிதண்ணீர் இல்லை, இருக்கிற நிழற்குடையில் உட்கார முடியல - அச்சத்துடன் பயணிக்கும் பெண் பயணிகள்.

 

மதுரை அண்ணா பேருந்துநிலையம்

 

மதுரையில் மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையத்திற்கு அடுத்தபடியாக பிரபலமான பேருந்து நிலையம், அண்ணா பேருந்துநிலையம். மதுரை அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள பகுதியில் பிரதான பேருந்து நிலையமாக செயல்பட்டு வந்தது அண்ணா பேருந்துநிலையம். தற்போது மாநகராட்சியின் உரிய பராமரிப்பு மேற்கொள்ளாத நிலையில் அடிப்படைவசதிகள் கூட இல்லாத பஸ் ஸ்டாண்டாக மாறிவிட்டது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு புறநகர் பகுதிகளுக்கு செல்லக்கூடிய அதிகளவிலான இலவச பெண்கள் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் இந்த பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் நாள்தோறும் பேருந்துகளுக்காக வரக்கூடிய பெண்கள் கடும் அச்சத்துடன் சென்று வரக்கூடிய சூழல் நிலவிவருகிறது.

 


 

பயணிகளுக்கு சிரமம்

 

அண்ணா பேருந்து நிலையம் வாசலிலேயே 2 மதுபான கடைகள் உள்ளதால் மது அருந்திவிட்டு மது குடித்தோர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் இருக்கைகளில் படுத்துக்கொள்கின்றனர். இதேபோன்று நிழற்குடைகள் ட்ரை சைக்கிள் ஸ்டாண்டாக மாறியுள்ளது. இதேபோன்று பேருந்துநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பயணிகளின் நிழற்குடை இருக்கைகளும் தோள் உயரத்திற்கு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமரும்போது தாவி ஏறி அமர்வதோடு, அவசரத்திற்கு இறங்கும்போது கீழே விழும் அளவிற்கு குதித்து இறங்க வேண்டிய நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிழற்குடையில் கற்களைப் போட்டு அதன் மீது ஏறி இருக்கையில்  அமர முடியாதவகையில் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் முதியவர்கள்,  பெண் பயணிகளும் நீண்ட நேரமாக காத்திருப்பதால் பாதாள சாக்கடை வடிகால்களில் அமர்ந்துகொள்கின்றனர்.

 

இலவச கழிப்பறையும் கட்டண கழிப்பறையாக

 

பேருந்துநிலையத்திற்கு இலவச பேருந்துக்காக பெண் பயணிகள் மற்றும் கல்லூரி  மாணவிகள் வந்து செல்லக்கூடிய நிலையில் அங்கிருந்த ஒரு இலவச கழிப்பறையும் கட்டண கழிப்பறையாக மாற்றி வசூல் வேட்டை நடைபெறுகிறது. நகரின் முக்கிய பகுதியில் பெண்கள் அதிகளவில் பயன்படுத்தக்கூடிய அண்ணா பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு போதிய வருவாய் இல்லை என்பதால்  அதனை பராமரிக்காமலும், கண்டுகொள்ளாமலும் இருப்பதால் மதுபோதை ஆசாமிகளின் சொர்க்கமாக மாறி இலவச பயணம் செல்லும் பெண்களுக்கு அச்சமடையும் பகுதியாகவும் மாறியுள்ளது.

 

அண்ணாவின் கொள்கையை பின்பற்றுவதாகவும், அண்ணாவின் வழியில்நடப்பதாகவும் கூறும் திமுகவின் ஆட்சியில் அண்ணாவின் பெயரில் உள்ள பேருந்து நிலையத்தை பராமரிக்க தயக்கம் ஏன்? எனவும், ஆண்டாண்டு காலமாக மக்கள் பயன்பாட்டில் உள்ள அண்ணா பேருந்துநிலையத்தின் அவலத்தை அதிகாரிகள் நேரில்சென்று பார்ப்பதற்கு கூட தயக்கம் ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.