திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் விதை விற்பனை நிறுவனங்கள் நடத்தி வருபவர் அரவிந்த் (34). இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் தேடி வந்தனர். பல இடங்களில் வரன் தேடியும் கிடைக்காததால், ஆன்லைன் செயலி மூலம் வரன் தேடினர்.
அப்போது ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே ஒத்தக்கடையை சேர்ந்த பழனிசாமியின் மகள் சத்யா (40) என்ற பெண் அறிமுகமானார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், நாம் நண்பர்களாக பழகுவோம் என்றும் கூறி அரவிந்திடம் சத்யா பழகி வந்துள்ளார்.
பின்னர் இருவருக்கும் இருந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது, இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் கொண்டனர். பின்பு சில நாட்களுக்கு பிறகு சத்யா நகை, பணத்திற்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் என்ற தகவல் அரவிந்திற்கு தெரியவந்தவுடன் அதிர்ச்சி அடைந்தார்.
பேக்கரி உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார்
இந்நிலையில் தனது வழக்கறிஞர் செல்வக்குமார் மூலம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரவிந்த் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியது.. நானும், சத்யாவும் சேர்ந்து அடிக்கடி வெளியூருக்கு சென்று வருவோம். தமிழ்ச்செல்வி என்பவரும் உடன் வருவார். அப்போது தான் சத்யாவிற்கு புரோக்கர் தமிழ்செல்வி என்பது எனக்கு தெரியவந்தது.
தமிழ்ச்செல்வி பலமுறை என்னிடம் புரோக்கர் கமிஷன் பெற்றுள்ளார். பின்னர் ஏசி வாங்க வேண்டும் என்று இருவரும் என்னிடம் ரூ.46 ஆயிரம் பெற்றுள்ளனர். இந்நிலையில் 20-6-2024 அன்று எனது அலுவலகத்திற்கு சத்யா வந்தார். வீட்டில் அவரது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் தனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து உள்ளதாகவும் சொல்லி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார்.
என்னை திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். உடனடியாக இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். பின்பு சில நாட்கள் அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் மனைவி சத்யாவின் நடவடிக்கை பேக்கரி உரிமையாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனால் தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சத்யா என்னை மிரட்டினார் . ஆகையால் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் என கூறியிருந்தார்.
பல ஆண்களை ஏமாற்றிய பெண் சத்யா கைது
பின்பு சத்யா மற்றும் புரோகர் தமிழ்ச்செல்வி இருவரும் தலைமறைவாக இருந்தனர். மேலும் சத்யாவை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சத்யாவையும், கல்யாண புரோக்கர் தமிழ்ச்செல்வியையும் தேடி வந்தனர். அப்போது அவர்களது செல்போன் சிக்னல் புதுச்சேரியை காட்டியது.
இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று புதுச்சேரி சென்று அங்கு தோழியின் வீட்டில் பதுங்கி இருந்த சத்யாவை பிடித்து தாராபுரம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், போலீசாருக்கு கிடைத்த தகவல் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
சத்யா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையை சேர்ந்த அருண் என்பவரையும் காதலித்து ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவருடன் சில நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு அடுத்து கரூரைச் சேர்ந்த போலீஸ்-சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கை காதலித்து கரம் பிடித்தார்.
பின்னர் சப்-இன்ஸ்பெக்டரையும் உதறி தள்ளிவிட்டு, அடுத்ததாக மாட்டு வியாபாரி ராஜமாணிக்கத்தின் மகன் பிரகாசை ஏமாற்றி பணம் பெற்றுள்ளார். அதோடு நிற்கவில்லை, 2012-ம் ஆண்டு ராஜேஷ் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். அதன்விளைவாக இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் தான் செல்போன் செயலி மூலம் தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளரிடம் பழகி அவரை தன் அழகில் மயக்கி திருமணம் செய்து சில நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு ஓட்டம்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து சத்யா மீது கொலை முயற்சி மற்றும் ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த திருமணத்திற்கு புரோக்கராக செயல்பட்ட தமிழ்ச் செல்வி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இவரையும் கைது செய்தால்தான் இன்னும் எத்தனை பேருக்கு சத்யாவை திருமணம் செய்து கொடுத்தார் என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.