தமிழக, கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர்ப்பாசன ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக போதிய மழைப்பொழிவு இல்லை.
இதனால் அணைக்கு நீர்வரத்து குறையத்தொடங்கி உள்ளது. 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று 116.05 அடியாக குறைந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்து முற்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல தேனி அருகே உள்ள ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர், பாசன ஆதாரமாக விளங்குகிறது. வைகை அணைக்கு வருசநாடு, வெள்ளி மலை, பொம்மராஜபுரம், அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெய்யும் மழை காரணமாக நீர்வரத்து ஏற்படும்.
TN Assembly: மீனவர்களுக்காக அதிமுகவுடன் கைகோர்த்த விசிக: பேரவையில் உறுதியளித்த அமைச்சர் மா.சு!
இது மட்டுமில்லாமல் முல்லைப்பெரியாற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் அணைக்கு நீர்வரத்தாகவும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் கோடை வெயில் அதிகமாக இருந்து வருகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக கண்மாய், ஊருணி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நீர்வரத்து இன்றி வறண்டு வருகின்றன.
அதன்படி, வைகை அணைக்கும் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 38 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. இது தவிர அணையில் தேங்கி இருக்கும் தண்ணீரும் வெயிலால் ஆவியாகி வருகிறது. அணைக்கு நீர்வரத்து இல்லாததாலும், தண்ணீர் ஆவியாவதாலும் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 54.23 அடியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது. மேலும் கோடை வெயில் தொடர்ந்து அதிகமாக நீடிக்கும் என்பதால், அணையின் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்