கோடை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரியாமல் இருக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய வனத்துறையினர், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் விவசாய கழிவுகளில், தீ வைக்க தங்களின் அனுமதி பெற்று தீ வைக்க உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தை சுற்றி மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதிகளில் கோடை காலங்களான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பற்றி எரிவது வழக்கமாக உள்ளது. இதனை தடுக்கும் விதமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினரால் கும்பக்கரை அருவியில் காட்டு தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு முகாம் அமைத்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனப்பகுதியில் காற்று தீ பற்றாமல் இருப்பது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
மேலும் வனப்பகுதிக்குள் செல்லும் பொழுது புகை பிடிப்பது, எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது கூடாது என அறிவுறுத்தினர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விவசாய விலை நிலங்களில் மற்றும் பட்டா நிலங்களில் விவசாய கழிவுகளில் தீ வைக்கும் பொழுது அப்பகுதி வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அனுமதி பெற்ற பின் வனத்துறையினர் முன் தீ வைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் காட்டுத் தீ பரவுவதற்கு காரணமான நபர்கள் மீது 1882 ஆம் வருட தமிழ்நாடு வனச் சட்ட பிரிவு 21 (a) மற்றும் (b) ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.காட்டுத் தீ தடுப்பு மற்றும் மேலாண்மை திட்ட விழிப்புணர்வு முகாமில் கும்பக்கரை அருவிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்