தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் உள்ள ஏழைகாத்தம்மன் ஸ்ரீவல்லடிகாரசுவாமி கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.‌ முன்னதாக ஜல்லிக்கட்டு உறுதிமொழியை ஆட்சியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து கோயில் காளைகள் முதலாவதாக அவிழ்த்துவிட்டு பின்னர் ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியேறியது. 




சுற்றிவரும் காளைகளின் திமிலோடு மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி விளையாடினர். ஒவ்வொரு சுற்றுக்கு தலா 50 மாடுபிடி வீரர்கள் என 400 வீரர்களும் 700 காளைகளும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காளைகளும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.




போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு அண்டா, பானை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசுகளாக வழங்கப்படுகிறது.‌ மேலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு இரு சக்கர வாகனம், தங்கக் காசுகள் வழங்கப்பட உள்ளது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.‌ அய்யம்பட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியை சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், தேனி என சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.




இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலயம் திருவிழாவை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.


இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் ஆன்லைனில் பதிவு செய்திருந்தனர். காளைகளை இணை இயக்குனர் ராம்நாத் உதவி இயக்குனர் அப்துல் காதர் தலைமையிலான கால்நடை மருத்துவர்கள் கால்நடைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி வழங்கினர்.




இதேபோல் மாடுபிடி வீரர்கள் 320 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. வீரர்கள் உறுதிமொழியுடன் காலை 8.45 மணி அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. கோட்டாட்சியர் கமலக்கண்ணன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப் பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர்.சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின.இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.




போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, குடம், சைக்கிள், குக்கர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு குவிந்தனர்.