தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், சின்ன ஓவுலாபுரம் கிராமத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடைபெற்ற மலை மாடுகள் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
தேனி, சுற்றுப்புற மாவட்டங்கள் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி கிராமங்களில் அதிகமாக வளர்க்கப்படும் பாரம்பரியமான நாட்டின மலைமாடுகளை பாதுகாப்பதற்கும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட இனமாக மலைமாடுகளை அங்கிகரிப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலை மாடுகளை அறிவியல் அடிப்படையிலான பராமரிப்பு மற்றும் இனவிருத்தி முறைகளை கால்நடை வளர்ப்பவர்களிடம் கற்பிக்கவும் மற்றும் மக்களிடையே மலை மாடுகளின் மகத்துவம் குறித்த விளக்கம் அளித்தல், அழிந்து வரும் மலைமாடுகளை பாதுகாப்பதற்காகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இக்கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.இக்கண்காட்சியில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. கால்நடை வளர்ப்பில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மற்றும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் தொழில்நுட்ப மாதிரிகள் தொடர்பாக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாய மக்களுக்கு மலைமாடுகளைப் பாதுகாத்தல், மரபுசாரா தீவன மேலாண்மை, நோய் பராமரிப்பு, மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் திருமதி நிவேதா அண்ணாதுரை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் பா.டென்சிங் ஞானராஜ், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் முனைவர் பி.என்.ரிச்சர்டு ஜெகதீசன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.ஜெ.அன்பழகன் சின்ன ஒவுலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி எஸ்.நாகம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.