காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் உரிமைகள் பறிபோகும் என, தமிழ்நாடு அரசின் நீர்வள அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர் புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரியில் உரிய நீரை திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும். தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு கர்நாடக அரசு ஆளாக நேரிடும். விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை 15 நாட்களுக்கு திறக்க கர்நாடகாவுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எவ்வளவு நீர் இருக்கிறதோ அதில் தமிழகத்திற்கான பங்கை தர கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போதிய மழை இல்லாததால் கர்நாடகாவில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால், இருக்கின்ற தண்ணீரில் தமிழ்நாட்டிற்கான பங்கீட்டை வழங்க வேண்டும் என்பதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தண்ணிர் திறந்துவிடப்பட்டதா என்ற கேள்விக்கு, உரிய நடைமுறைகளை பின்பற்றி தண்ணீர் திறந்துவிட 3 நாட்கள் ஆகும். பேச்சுவார்த்தையில் பலன் இல்லை என்று தான் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு சென்றோம். மீண்டும் பேச்சுவார்த்தைக்குச் சென்றாலும் நமது உரிமைகள் தான் பறிபோகும். காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உரிய உத்தரவை வழங்கியுள்ளதால், மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய தேவை இல்லை” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம்:
சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென நிறுத்தியது. இதனால், காவிரி நீர் விவகாரத்தில் இருமாநிலங்களுக்கும் இடையேயான பிரச்னை பூதாகரமாக வெடித்தது.
அடுத்தடுத்த சந்திப்புகளும், கூட்டங்களும்:
இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்றுக் குழு கூட்டம் ஆகியவை அடுத்தடுத்து நடைபெற்றன. ஏற்கனவே அறிவித்தபடி, தமிழ்நாட்டிற்கு 5000 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுவும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் டெல்லி சென்று, ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரை தனித்தனியே சந்தித்தனர். இதனிடையே, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமுடியாது என கர்நாடக அரசும், 24,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அரசும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
உச்சநீதிமன்றம் அதிரடி:
இருமாநில அரசுகளின் மனுக்களும் நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை மற்றும் உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட இடைக்கால மனுக்கள் மீது தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்தது. அதாவது தமிழக அரசு சார்பில் 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிடக்கோரியது நிராகரிக்கப்பட்டது. மேலும், ஒழுங்காற்று குழு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் 5000 கன அடி நீரை கர்நாடகம் தமிழகத்துக்கு தற்போது திறக்க வேண்டும் என உறுதிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.