பழனியருகே கோவிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் சாமி கும்பிட அனுமதி அளித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரத்தில், கோவிலுக்குள் விடமறுத்து பெண்கள் கோவில் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மற்றொரு தரப்பினர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சித்தரேவு கிராமம். இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வந்த உச்சி காளியம்மன் கோவிலில் அனைத்து சமுதாயத்தினரும் வழிபட்டு வந்தனர். இந்நிலையில், உள்ளூர் நிர்வாக பிரச்சனை காரணமாக கோவில் பராமரிப்பின்றி பூட்டப்பட்டதை தொடர்ந்து கோவில் சிதிலமடைந்தது. இதனையடுத்து சிதிலமடைந்த கோவிலை ஒருதரப்பினர் சேர்ந்து புனரமைத்து கடந்த மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்தினர். இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட கோவிலில் பட்டியலின மக்களை உள்ளே விட மறுப்பதாக குற்றம்சாட்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் சித்தரேவு கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் உச்சி காளியம்மன் கோவிலுக்குள் பட்டியல் இனமக்கள் உள்ளே சென்று சாமி கும்பிட அனுமதி வழங்கி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய இருந்த நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையறிந்த மற்றொரு பிரிவை சேர்ந்த பெண்கள் கோவில் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாங்கள் வரிசெலுத்தி கட்டிய கோவிலுக்குள் அனுமதிக்கமாட்டோம் என தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிமன்றம் உத்தரவை மீறினால் கடும் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்றும், கோவிலுக்குள் அனுமதித்து சாமி தரிசனம் செய்ய சம்மதிக்க வேண்டும் என்றும், அதன்பிறகு சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்யலாம் என்பது குறித்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் சமரசம் செய்தனர்.
இதையடுத்து அனைவரையும் கோவிலுக்குள் அனுமதிக்க சம்மதம் தெரிவித்ததை அடுத்து, ஊர் பொதுமக்கள் முன்னிலையில் கோட்டாட்சியர் சிவக்குமார் கோவிலை திறக்க, போலீசார் பாதுகாப்புடன் பட்டியல் இன மக்கள் அனைவரும் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். ஒருபிரிவினரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்து கோவில் முன்பு பெண்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்