தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. கடந்த 2012ல் 7ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றார். 

 

அந்த மாணவி அலறியபோது, கழுத்தை நெரித்து கொலை செய்தார். செய்துங்கநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து சுப்பையாவை கைது செய்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் சுப்பையாவுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து சுப்பையா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீடு செய்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நடந்த சம்பவங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது. போதுமான சாட்சியம் மற்றும் ஆவணங்களின்படியே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கிழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் தலையிட வேண்டியதில்லை” எனக் கூறி தண்டனை வழங்கிய மகளிர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

 



 


 



















சுங்கம் பள்ளிவாசல் முறைகேடு புகார் மீது 2 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளனர். 

 

மதுரை கீழவெளிவீதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,

”மதுரை சுங்கம் பள்ளிவாசல் 300 ஆண்டுகள் பழமையானது. இது வக்புவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாசல் ஜமாத்தின் இணை செயலாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்தநிலையில் அங்கு முறையற்ற நிர்வாகம், நிதி முறைகேடுகள் நடப்பதாக கூறி, அதன் செயற்குழு உறுப்பினர்கள் வக்பு வாரியத்தில் 2018-ம் ஆண்டில் புகார் செய்தனர். இதற்கிடையே நடந்த தேர்தலில் அதே நிர்வாகிகள் மீண்டும் தேர்வானார்கள். முறைகேடுகள் குறித்து ஏற்கனவே அளித்த புகார் மீதான விசாரணைக்கு சுங்கம் பள்ளிவாசல் தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

 

அதன்பேரில் வக்பு வாரிய விசாரணையில் ஆஜரான அனைத்து தரப்பினரும், தங்கள் தரப்பு தகவல்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். விசாரணை முடிவடைந்தும் தற்போது வரை எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த பள்ளிவாசல் நிர்வாக தலைவர், செயலாளர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் நிர்வாகிகளாக தொடருவதை அனுமதிக்கக்கூடாது. எனவே சுங்கம் பள்ளிவாசல் முறைகேடுகள் தொடர்பான புகார்களை விசாரித்தன்பேரில் உரிய உத்தரவை பிறப்பிக்க வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், இதுதொடர்பாக தகுதி அடிப்படையிலும், சட்டப்படியும் தகுந்த உத்தரவை 2 மாதத்தில் பிறப்பிக்க வேண்டும் என்று வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.