மதுரை மாவட்டம் விரகனூர் ரிங்ரோடு அருகே உள்ளது கோழிமேடு. இப்பகுதியில் அதிகளவு பழைய பொருட்கள் சேமிப்பு குடோன்கள் உள்ளது. இந்நிலையில் இங்கு செயல்படும் பழைய பிளாஸ்டி குடோன் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாலை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.



அண்ணாதுரை மற்றும் ரமேஷ் என்பவர்களுக்கு சொந்தமான இந்த பிளாஸ்டி குடோனில் டன் கணக்கில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இரும்பு ஜாமான்கள் சேமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பிளாஸ்டிக் கழிவுகளும் மளமளவென எரியத் தொடங்கியது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் மற்றும் ரசாயன நுரையை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.



பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக விரகனூர் தொடங்கி தெப்பக்குளம் வரை வானம்  முழுவதிலும் கரும்புகை எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பிளாஸ்டிக் குடோன்கள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.




 

 

இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர்...," சாய்ந்தரம் கரு,கருனு பொகை மேல வரைக்கும் தெரிஞ்சுச்சு. ஓடியாந்து பாக்கைல தான் இரும்பு கடையில தீ எரிஞ்ச விசயம் தெரிஞ்சுச்சு. ஆனா யாருக்கும் சேதம் இல்ல, அது வரைக்கும் சந்தோம்" என்றனர்.



இதனை கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*




 






இது குறித்து சிலைமான் காவல்துறையினர்....." தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்களுக்கு சொல்லிட்டோம். 2 தீயணைப்பு வண்டியையும், மாநகராட்சி தண்ணீர் வண்டியையும் பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துட்டோம். அரைத்த 10 டன் பிளாஸ்டிக், மற்றும் அரைக்காத பிளாஸ்டிக் 5டன் எரிந்தது. அதே போல் பக்கத்து குடோனில் 10 டன் பிளாஸ்டிக் எரிந்தது. மொத்தம் 25 டன் பிளாஸ்டிக் எரிந்திருக்க வாய்ப்புள்ளது. பிளாஸ்டிக் குடோனுக்கு பின்னாடி சமூக விரோதிகள் தீ வைத்துள்ளனர். அது கொஞ்சம், கொஞ்சமாக பரவி குடோனில் தீ பற்றி எரிந்தது. குடோனில் கேஸ் இருந்ததால் அது வெடித்து தீ குடோன் முழுதும் பரவி இருக்கலாம். எனினும் முழு விசாரணைக்கு பின்பு தான் துல்லியமான நிலவரம் தெரியவரும்" என்றனர்