மதுரை கரிமேடு பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். மீன்கடைகளில் கடும் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களை சோதனையிட்ட போது, 500கிலோ மீன்கள் அழுகி, கெட்டுப்போய் இருந்ததும், மீன்களில் பார்மலின் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது. அதே போல் மாட்டுத்தாவணி பகுதியில் இருக்கக்கூடிய மொத்த மீன் மார்கெட்டில் பல்வேறு மாநிலங்களிலிருந்து ரசாயானம் தடவப்பட்ட மீன்கள் கொண்டு வரப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து நள்ளிரவு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சோதனை ஈடுபட்டனர். சோதனையின் போது ரசாயனம் கலக்கப்பட்ட 70 கிலோ மீன்களை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டினர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு மீன் கடைகளும், கழனிவாசல் சாலையில் ஒருங்கிணைந்த மீன் அங்காடியும் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கடல் பகுதிகளில் இருந்து மீன்கள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கன்னியாகுமரி, நாகர்கோவில் போன்ற தொலை தூர ஊர்களில் இருந்து வரும் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக ரசாயணம் தடவி பதப்படுத்தி விற்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதிக்கு ரகசிய தகவல் வந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மீன்கள் அதிக அளவில் விற்கப்படும் என்பதால், முதல் நாள் இரவே மதுரையில் இருந்து மீன்வள அதிகாரிகளை வரவழைத்து, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதி வாட்டர் டேங்க், கழனிவாசல் ரோடு, செக்காலை போன்ற பகுதிகளில் இயங்கி வந்த மீன் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார். சோதனையில் ரசாயணம் தடவி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 50 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களும் சுமார் ஒரு கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. காவல் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினரின் உதவியோடு உணவு பாது காப்புத்துறையினர் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதே போல் மதுரை ஆவின் அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக புகார் எழுந்துள்ளது. மதுரை ஆவின் பால் பண்ணையில் ஒரு கம்ப்ரெஸ்ஸர் இயந்திரம் பழுதடைந்த நிலையில், பழுது நீக்கமால், ஆவின் பசும்பால் என்றப் பெயரில் விற்கப்படும் பால், 50 ஆயிரம் அரை லிட்டர் பாக்கெட்டுகள் முறையாக குளிரூட்டப் படாமல் விற்பனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பால் வாங்கி காய்ச்சியோர் பால் திரிந்த நிலையில் அதிர்ச்சியடைந்தனர். பால் விநியோகம் செய்த பால் பூத் விற்பனையாளரைத் தொடர்பு கொண்ட போது சரியான பதில் இல்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதிகாரிகளின் கவனக் குறைவால் பத்து லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில்...," தென் மாவட்டங்களில் தற்போது மீன்களில் இரசானம் தடவும் செயல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இது போன்ற தவறுகளை குறைக்க முடியும். ஆவின் நிலையத்தில் பால் கெட்டுப் போன விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளின் மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுத்து இழப்பீடு தொகையை கட்டச் சொல்ல வேண்டும்” என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!