அமைதியையும், சுவாரசியத்தையும் விரும்பும் நபர்களுக்கு காரங்காடு சூழல் சுற்றுலா தலம் பிடித்துபோகும். இராமநாதபுரத்தில் இருந்து தொண்டி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 40 கி.மீ. தூரத்தில் உள்ளது மணக்குடி. இங்கே இருந்து சுமார் 2 கி.மீ கிழக்கு நோக்கி பயணித்தால் கடல் காற்று வீசும், காரங்காடு வந்துவிடும். சென்னைக்கு அருகேயுள்ள முட்டுக்காடு, கடலூர் பிச்சாவரத்தில் உள்ள அலையாத்திக் காடுகள் ஆகியவற்றைப் பற்றித்தான் நம்மில் பலருக்குத் தெரியும். அதற்கு இணையாக ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடும் மிக அழகானது.




 

'பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம், வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம், துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம், குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்' - என வைரமுத்து எழுதி இருப்பார். அப்படியான பாடல் வரிகளில் இணைக்கவேண்டிய இடம்தான் காரங்காடு. பொதுவாக மலை மற்றும் நன்னீர் நிலத்தில்தான் மரங்கள் நிறைந்திருக்கும். ஆனால் உப்பு நீர் நிறைந்த பகுதியில் வளர்ந்திருக்கும் காடுகள்தான் இந்த அதிசயம். அலையாத்தி காடுகள்தான் சிறப்பு இங்கு. இப்படியான சதுப்பு நிலக் காடுகள் பல தரப்பட்ட உயிர்களுக்கு உறைவிடமாகவும், அதற்கு உணவு வழங்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்குகிறது.



தில்லை வனம், கடலோர மரக்காடுகள், கடலில் நடக்கும் காடுகள், அலையிடைக் காடுகள் கடலின் வேர்கள், கடலின் மழைக்காடுகள், அலையாத்திக் காடுகள், சுரப்புன்னைக் காடுகள் என ஏராளமான பெயர்களால் அழைக்கப்படும் இந்தச் சதுப்பு நிலக் காடுகள் புயல், வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களில் இருந்து  காக்கும் முக்கிய  பணியைச் செய்கிறது. மனிதர்களை கோழி குஞ்சுபோல் அரவணைத்துப் பாதுகாக்கும் சதுப்பு நிலக் காடுகள் நிறைந்த பகுதி, சுற்றுலா தலமாகவும் அமைந்துள்ளது வரப்பிரசாதம்.


 

காரங்காடு  சுமார் '75 ஹெக்டேர்' அளவு கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில்  கடல் நீருக்கு கரைகளாக வளர்ந்து நிற்கின்றன. மாங்குரோஸ் எனப்படும் அலையாத்திகள். இதன் கொள்ளை கொள்ளும் அழகை ரசிக்க படகில் 2 கி.மீ செல்லவேண்டும். தமிழ்நாடு வனத்துறையினர் காரங்காடு கிராம மக்களுடன் இணைந்து இதற்கென 'காரங்காடு சூழல் மேம்பாட்டு குழு' என்ற அமைப்பினை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் 'சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் படகு சவாரி, கயாக்கிங் 'Kayaking' எனப்படும் துடுப்பு படகு சவாரி, ஸ்நார்கிலிங் 'Snorkeling' எனப்படும் தண்ணீருக்குள் அடியில் உள்ள உயிரினங்களை காண்பது  போன்ற வசதிகளை செய்து கொடுக்கின்றனர்.



 

 அடடா படகு சவாரி...

 

காரங்காடு கிராமத்தின் கரையோரம் தொடங்கி, கடலின் அறிவுறுத்தப்பட்ட தூரம்வரை சென்றுவர பயண வசதிகள் கிடைக்கிறது. எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்கின்றனர். இப்படியான இனிய படகு பயணத்தில் அலையாத்தி காடுகளுக்கு இடையே உணவு தேடியபடி செல்லும் சதுப்புநிலக் காட்டு பறவைகளான செந்நாரை, கோட்டான், மஞ்சள் மூக்கு நாரை, குதிரைத் தலைக் கோட கோட்டான், ஆலாக்கள், கடற்புறாக்கள்,  பவளக்காலி உள்ளிட்ட பறவைகள் கண்களுக்கு விருந்து அளிக்கிறது.

 



 

நான் தான் ஹைட்டு, பார்க்கும் காட்சி வெயிட்டு.. 

 

அழகு கொஞ்சும்  அலையாத்திக் காடுகளின் அழகினை  'கடல் பசு தீவு' பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓங்கி உயர்ந்து நிற்கும் காட்சி கோபுரத்தின் மீது இருந்து 'ஐ பேர்ட் ஆங்கிளில்' கண்களுக்கு தீனி கொடுக்கலாம். அதனை முடித்த பின் கரைக்கு திரும்பும் வழியில் கடல் நீருக்கு அடியில் வளரும் கடற்புற்கள், நட்சத்திர மீன்களை கடலில் மூழ்கியபடி காணலாம். இதற்கென கண்ணாடி, சுவாசிக்கும்  கருவிகள் என பிரத்யேகமாக தரப்படுகிறது. இதனைக் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் அணிந்து கொண்டு கடல் தாவரங்களையும், அதன் ஊடாக வளரும் சிறு மீன் இனங்களையும் பார்க்கும் உள்ளம் அனிச்சையாக சிலிர்க்கும்.



 

மீன்கள் போல நீந்தும் உணர்வைத்தரும் துடுப்புப்படகு..

 

கயாக்கிங் ( Kayaking) எனப்படும்  துடுப்பு படகு பயணத்திற்கென கலர்புல்லாக காத்திருக்கிறது படகுகள். அமைதியான ஏரியாக காட்சியளிக்கும் கடல்பரப்பில் பயணம் செய்யவும் அதனை இயக்கவும் வாய்ப்பு கிட்டும். வனத்துறையின் குறிப்பிகள் அடிப்படையில் பாதுகாப்பு மிதவை உடையினை அணிந்து கொண்டு கைகளில் துடுப்பை எடுத்துக்கொண்டு பயணத்தை தொடங்கலாம். குறைந்த ஆழத்தில் சிறுவர்கள் கூட பயம் இல்லாமல் இயக்கமுடியும். இதனால் அவர்களே அச்சத்தை உதிர்த்து பேரானந்தை உணர்வார்கள்.

 



 

கிராமத்து கை பக்குவத்தில் கடல் சாப்பாடு

 

காரங்காடு சுற்றுலாவை ரசித்து வீடு திரும்ப மனம் இடம் கொடுக்காது. ஒருவழியாக மனம் நிறைந்து, பசியோடு கரை திரும்புபவர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடு கொடுக்கப்படுகிறது. மீன் குழம்பு, நண்டு கிரேவி, நண்டு சூப், இறால் கட்லெட், கணவாய் கட்லெட், மீன் வறுவல் மற்றும் தக்காளி சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் தாகம் தீர்க்கும் இயற்கை பானங்களான மோர், எழுமிச்சை சர்பத், இஞ்சி டீ என எல்லாமும் கிடைக்கிறது. பயணத்திற்கு முன் ஆர்டர் கொடுத்து விட்டு சென்றால் கடல் உணவுகள் தயாராக இருக்கும் என்று உறுதி கொடுக்கிறார். சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினர் ஜெரால்டு மேரி.



மேலும் காரங்காடு கிராம மக்கள், காரங்காடு சுற்றுலாக்கு மட்டுமில்ல நண்டுக்கும் பேமஸ். எங்க ஊரு நண்டு செமத்தியா இருக்கும். வெளிநாடுகளுக்கும் காரங்காடு நண்டு போகுது. இங்க உள்ள அலையாத்தி காடுகளின் அமைப்புத்தான் இதற்கு முக்கிய காரணம். ஆனால் இதையெல்லாம் உணர வைத்தது  வனத்துறையினர்தான்.  வனத்துறையினர் எங்களுக்கு வழிகாட்டுனதுதான் எங்க ஊர் சுற்றுலா தலமாக பெயர் வாங்கிட்டு இருக்கக் காரணம் என்கிறார். வனச்சரகர் சதீஷ் மற்றும் அவரின் குழுவினர் களப்பணியில் எங்களோட இணைஞ்சு பணி செய்றாங்க. வனச்சரகர் சதீஷ் சாருக்கு சமீபத்துல சுவிட்சர்லாந்தைத் தலைமையிடமாகக்கொண்ட ஐ.யூ.சி.என் என்று சொல்லப்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம்,  சர்வதேச வனச்சரகர் விருதை வழங்கியுள்ளது.

 



இது அவருக்கும், அவரின் குழுவினருக்கும், எங்கள் கிராம மக்களுக்கு கிடைச்ச வெற்றியா நினைக்கிறோம். தொடர்ந்து வனத்துறையினர் எங்களோட இணைந்து பணி செய்கிறார்கள். அதனால இயற்கையால எங்க ஊர் ஜொலிக்குது. காரங்காடுக்கு கண்டிப்பா அனைவரும் சுற்றுலா வாங்க. காரங்காடு சூழல் மேம்பாட்டுக் குழுவோட  7598711620  இந்த நம்பருக்கு போன் செஞ்சுட்டு வந்தா உங்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கும்" என்றார்கள் நம்பிக்கையாக.

 



 

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக நீக்கப்படாததால் காரங்காடு சுற்றுலா தலத்திற்கும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. நவம்பர் மாதத்திற்கு பின் மீண்டும் சுற்றுலா துவங்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் கடந்த மே-22 தேதி சர்வதேச உயிர்பரவல் நாளையொட்டி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறை அமைச்சகம் காரங்காடு சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் வளங்களை மேம்படுத்தியது, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியது என பல பிரிவுகளின் கீழ்  வனச்சரகர் சதீஷுக்கு தேசிய பல்லுயிர் பரவல் விருது  வழங்கியுள்ளது. இதனால் இராமநாதபுரம் வனத்துறையினரும், காரங்காடு பகுதி மக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுற்றுலாவுக்கு அனுமதி கிடைச்சதுக்கு பிறகு ஒரு டூர் போகலாமா !