ள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் சின்னஞ் சிறு மாணவ, மாணவிகள் மத்தியில் அவர்களை வசீகரிக்கும் வகையிலும் அவர்களின் கற்பனைத் திறனை வலுப்படுத்தும் விதமாக பள்ளியின் சுவர்களில் ரயில் வண்டி போல வர்ணம் பூசப்பட்டு அசத்தியுள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது.


அரசனூர் நடுநிலைப் பள்ளி


சிவகங்கை மாவட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறாக, மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் நிலைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கள ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.


- Madurai: மீண்டும் ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் தானம்.. மதுரை ஆயி பூரணம்மாள் அடுத்தடுத்து அசத்தல்!




அதன்படி, அரசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.15.94 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2023-24-ன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் வகுப்பறை கட்டிடங்களில் இரயில் பெட்டியை போன்று வர்ணம் பூசப்பட்டுள்ள பணிகள் மற்றும்  மாணாக்கர்களிடையே  கற்றல் திறன்  ஆகியன குறித்தும், ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், அரசனூர் ஊராட்சி மன்றத்தலைவர் தலைவர் செல்வராணி அய்யப்பன் மற்றும் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.




மாணவர்கள் மகிழ்ச்சி



அரசனூர் நடுநிலைப்பள்ளியில் ரயில் பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள வகுப்பறைகள் ரயில் பெட்டியை போன்று வடிவமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. வகுப்பறையின் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் நிஜ ரயிலை போன்றே உள்ளது. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் சிவகங்கை முதல் அரசனுர் செல்லும் ரயில் என முன் பக்கத்தில் எழுதப்பட்டுளளது. இதுவரை பள்ளிக்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களை மட்டுமே பார்த்தும் இதுவரை ரயில்களில் செல்லாமல் இருக்கும் மாணவ, மாணவிகள் தற்போது நிஜ ரயில் உட்கார்ந்து பாடம் படிப்பது போன்று உணர்கின்றனர். பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் மாணவ, மாணவிகள் மத்தியில் அவர்களை வசீகரிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் செய்துள்ள இந்த புதிய முயற்சிக்கு வரவேற்பும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.



 

ரயில் வண்டி விளையாட்டு

 

இதுகுறித்து பள்ளி மாணவர் நம்மிடம் கூறுகையில்..,” ரயில்னா எல்லாருக்கும் பிடிக்கும். எங்களுக்கு பிடிச்ச ரயில வகுப்பறையில் வண்ணமா தீட்டியது எங்களுக்கு ரெம்பவும் பிடிச்சுருக்கு. எங்களோட பள்ளியோடத்த பார்த்து நாங்களும் நோட்டில் வரைஞ்சு பார்த்து சந்தோஷப்பட்டுக்கிட்டோம். இடைவெளி நேரத்தில் டிக்கெட் விற்று, பயணம் செய்து ரயில் விளையாட்டெல்லாம் விளையாடுறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என தங்களது எண்ணத்தை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.