இந்தியா-இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டமானது தற்போது வரை இந்திய அணிக்கு சாதகமாகவே உள்ளது. காலை முதல் இந்திய அணி 6 இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை வீழ்த்தியுள்ள நிலையில், இன்னும் 3 விக்கெட்களை எடுத்தால் வெற்றி பெற்றுவிடும். 399 ரன்கள் இலக்கை துரத்தும் இங்கிலாந்து அணி இதுவரை 7 விக்கெட்களை விட்டுகொடுத்துள்ளது. இந்தநிலையில், இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி சிறப்பான தொடக்கத்தை அளித்து 73 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்சிலும் கிராலி அரைசதம் அடித்தார், இதன் மூலம் சிறப்பான சாதனையை படைத்தார். 


இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம்:


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்ததன் மூலம், ஜாக் கிராலி 10 ஆண்டுகளில் இரண்டு இன்னிங்ஸிலும் 50 ரன்களைக் கடந்த மூன்றாவது வெளிநாட்டு பேட்ஸ்மேன் ஆனார். இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி முதல் இன்னிங்ஸில் 78 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் 132 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் எடுத்தார். 






கடந்த 10 ஆண்டுகளில், இலங்கையின் தினேஷ் சண்டிமால் இந்த சாதனையை முதன்முதலில் நிகழ்த்தினார். 2017-ல் நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சண்டிமால் 57 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்களும் எடுத்திருந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


2021ல் கான்பூரில் நடந்த டெஸ்டில் நியூசிலாந்தின் டாம் லாதம் 10 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இந்த சாதனையை நிகழ்த்தினார். ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் 95 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 52 ரன்களும் எடுத்திருந்தார் டாம் லாதம்.  






தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணி: 


ஜனவரியில் தொடங்கிய தொடர் மார்ச் மாதம் முடிவடையும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி 0-1 என பின்தங்கியுள்ளது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தற்போது தொடரின் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.  இரண்டாவது போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பது இப்போது சுவாரஸ்யமாக உள்ளது. 


இரு அணி விவரம்: 


இந்திய அணி: 


யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார்


இங்கிலாந்து அணி: 


ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, சோயிப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன்