மதுரை ஆயி பூரணம்மாள் ஏற்கனவே அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய நிலையில் தற்போது மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான 91 சென்ட் நிலத்தை அதே பள்ளிக்கு தானமாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை தத்தனேரியைச் சேர்ந்த வத்தல் வணிகர் இராமச்சந்திரன் அவர்கள் திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தார். மேலும் பத்ம ஸ்ரீ, தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட 25 லட்ச ரூபாய் வழங்கினார்.
அதே போல் வங்கி ஊழியர் ஆயி பூரணம் அம்மாள் அவர்கள் ஒத்தக்கடை அருகில் உள்ள கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு ரூபாய் 7 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கினார். இதையடுத்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இப்படி மதுரையில் அரசுப் பள்ளிக்கு உதவி செய்த பலரையும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆயி பூரணம்மாள் மீண்டும் ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக கொடுத்துள்ளார்.
மதுரை மூன்றுமாவடி அருகே உள்ள சர்வேயர் காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதி உக்கிரபாண்டியன் - ஆயி பூரணம்மாள். கணவர் உக்கிரபாண்டி காலமான சூழலில் ஆயி பூரணம்மாள் மதுரையில் வங்கி ஒன்றில் பணி செய்துவருகிறார். இவரது மகள் ஜனனி உயிரிழந்த நிலையில், அவரது நினைவாக கொடிக்குளம் கிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளிக்கு தனது சொந்த நிலம் 1.52 ஏக்கர் நிலத்தை ஆயி பூரணம்மாள் தானமாக வழங்கினார். இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 7 கோடியாகும். பள்ளி தரம் உயர்த்தப் படும்போது அங்கு பள்ளிக்கு தேவையான கட்டிடங்களை கட்டிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்தார். இந்த பறந்த விரிந்த செயல் மதுரை மக்கள் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த பலரையும் வாழ்த்து தெரிவிக்க வைத்தது. மேலும் தமிழ்நாடு முதல்வர் குடியரசு தினத்தன்று விருது வழங்கி கெளரவித்து பாராட்டினார். இந்த நிலையில் தற்போது மேலும் ரூ.3 கோடி மதிப்பிலான 91 சென்ட் நிலத்தை அதே பள்ளிக்கு தானமாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது வழங்கியுள்ள நிலத்தின் வழிகாட்டு மதிப்பு ரூ.22.75 லட்சம் என சொல்லப்படும் நிலையில் அதன் மார்கெட் மதிப்பு ரூ.3 கோடி எனவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக செட்டில்மெண்ட் ஆவணங்களை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் பூரணம்மாள் உறவினர்கள் முன்னிலையில் ஒப்படைத்துள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Zak Crawley: 10 ஆண்டுகளில் இது மூன்றாவது முறை மட்டுமே.. இந்திய மண்ணில் ஜாக் கிராலி தனித்துவ சாதனை படைப்பு!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Ind vs Eng 2nd Test: இங்கிலாந்தை ஓடவிட்ட இந்தியா; இரண்டாவது டெஸ்ட்டில் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி