தேர்தல் திருவிழா 2024


வரும் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.


மல்லுகட்டும் மதுரை:


மதுரை பாராளுமன்ற தொகுதியில் பி.ஜே.பி., வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர்களை காட்டிலும்  இந்தியா கூட்டணி வேட்பாளர் எம்.பி., சு.வெங்கடேசனுக்கும், அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் மதுரையில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை உறுதியாக சொல்லமுடியாத நிலையில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.


டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் கே.ராஜூவும், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பாவும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை தெற்கு தொகுதியில் டாக்டர் சரவணன் வாக்கு சேகரிக்கும் போது பலூன்களுடன் செல்லூர் ராஜூவும், வேட்பாளர் சரவணனும் விளையாடியது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.






செல்லூர் ராஜூ வாக்கு சேகரிப்பு


மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மதுரையில் பரபரப்பாக நடந்து வருகிறது. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதன்படி, மதுரை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட முனிச்சாலை தினமணி டாக்கீஸ் பகுதியில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

 

அங்கு தொண்டர்கள் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கும், செல்லூர் ராஜூவுக்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அதிமுக கொடி வண்ணத்தில் பலூன்கள் கொத்தாக வழங்கப்பட்டது. இதை பெற்றுக் கொண்ட செல்லூர் ராஜூ மற்றும் சரவணன் பலூனை உடைத்தும் அதை பறக்கவிட்டும் சிரித்தப்படி விளையாடினர். இதை கட்சி தொண்டர்களும், பொது மக்களும் கைதட்டியபடி கண்டு மகிழ்ந்தனர்.