Rahul Gandhi In Nellai: தமிழ்நாட்டின் வாயிலாக இந்தியாவை புரிந்து கொள்வதாக திருநெல்வேலி பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். சமூக நீதியில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் பாதையை வகுத்து கொடுத்ததாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். 


"இந்தியாவுக்கு முன்னுதாரணமாக இருக்கும் தமிழ்நாடு"


வரும் 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.


இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பரப்புரையில் ஈடுபட்டார்.


அப்போது பேசிய அவர், "தமிழகத்தை நேசிக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சம் நிறைந்த அன்போடு நேசிக்கிறேன். தமிழ்நாட்டின் கலாச்சாரம், வரலாறு, மொழி என்னை மிகவும்  ஈர்த்துள்ளது. எனக்கு தமிழக மக்களிடம் இருப்பது அரசியல் ரீதியான உறவு அல்ல, அது குடும்ப உறவு.


"தமிழ்நாட்டுடன் இருப்பது குடும்ப உறவு"


சமூக நீதியின் பாதையில் எப்படி நடக்கவேண்டும் என்பதை நாட்டு மக்களுக்கு தமிழ்நாடு எடுத்துரைக்கிறது. அதனால் தான் பாரத் ஜோடோ யாத்திரையை தமிழ்நாட்டில் தொடங்கினேன். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 4000 கிமீ நடந்து மாபெரும் தத்துவங்களை தெரிவித்தோம்.


எப்போதெல்லாம் இந்தியாவை புரிந்துகொள்ள ஆசைப்படுகிறேனோ அப்போதெல்லாம் தமிழகத்தை பார்க்கிறேன். தமிழை பேச முடியவில்லை என்றாலும் தமிழின் நூல்களை படித்திருக்கிறேன். இந்தியாவின் கண்ணாடியாக தமிழகத்தை பார்க்கிறேன்" என்றார்.


தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "தமிழ்நாட்டை சாராத மிகப்பெரிய தொழிலதிபர்கள் இந்தியாவின் உள்ள அரசு ஒப்பந்தங்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு அனுபவித்து வருகின்றனர். அதானி பிரதமருக்கு நெருக்கமாக இருப்பதால் நாட்டின் அனைத்து விதமான மின்சாரம் தயாரிக்கும் வசதியும் அவரே வைத்து கொண்டுள்ளார்.


"தமிழ்நாட்டுக்கு நிதியை கொடுக்க மறுக்கும் பாஜக அரசு"


நாட்டில் இருக்கும் சிறு குறு நடுத்தர தொழிற்சாலைகள் அனைத்தும் ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பால் சீரழிந்துள்ளது. நாட்டின் வருவாய், புலனாய்வு துறை, சிபிஐ வருமானவரித்துறை போன்றவைகள் மத்திய அரசின் கையில் எதிர்க்கட்சிகளை அழிக்கும் ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகிறது.


தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மிரட்டப்படுகிறார்கள். தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை கொடுக்க மத்திய அரசு மறுத்துள்ளது.


தமிழக மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை பிரதமர் மோடி ஆக்கிரமித்துள்ளார். பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்கிறார். இந்தியாவின் தாய் ஜனநாயகம் என போற்றப்பட்ட நாள் மாறி ஜனநாயகம் அழியும் நாள் நடந்து வருகிறது" என்றார்.