ஆட்டிறைச்சி சாப்பிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் 19-ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்குகிறது. மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஜூன் 1-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.


மட்டன் சாப்பிட்ட விவகாரத்தை விமர்சிக்கும் பிரதமர்:


தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி உணவு அரசியலை கையில் எடுத்துள்ளார்.


ஆட்டிறைச்சி சாப்பிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மட்டன் சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.


ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ் என பெயர் குறிப்பிடாமல் அவர்களை மறைமுகமாக முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்” என்றார்


"நாட்டு மக்களை கிண்டல் செய்யும் இந்தியா கூட்டணி"


”நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒரு குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று சாவன் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து உண்டு மகிழ்ந்துள்ளார்கள். நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள்" என்றார்.


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான வைரல் வீடியோ ஒன்றில் லாலு பிரசாத் யாதவும் ராகுல் காந்தியும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைத்திருந்தனர். இந்த வீடியோ குறிப்பிட்டுதான் பிரதமர் மோடி சாடியுள்ளார்.


ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் பிரச்சாரத்தின்போது இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, "சட்டம் யாரையும் எதையும் சாப்பிட கூடாது என தடுக்கவில்லை. ஆனால், இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் தாக்கியபோது, ​​கோவில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை.


அதனால் முகலாயர்களைப் போலவே சாவன் மாதத்தில் வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்" என்றார். சமீபத்தில், மீன் சாப்பிடும் வீடியோவை லாலு பிரசாத் யாதவின் மகனும் பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் பதிவிட்டிருந்தார்.


இதை சாடிய பிரதமர் மோடி, "நவராத்திரி மாதத்தில், அசைவ உணவுகளை உண்ணும் இந்த வீடியோக்களைக் காட்டி, மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி, யாரைக் கவரப் பார்க்கிறீர்கள்?" என்றார்.


அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்த பிரதமர், "ராமர் கோயில் என்பது பாஜகவுக்கு தேர்தல் பிரச்னை என்று காங்கிரஸ் கூறுகிறது. ராமர் கோயில் ஒருபோதும் தேர்தல் பிரச்னையாக இருந்ததில்லை. அது ஒரு தேர்தல் பிரச்னையாக மாறாது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். பாஜக தொடங்கப்படுவதற்கு முன்பே ராமர் கோயில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அந்நிய படையெடுப்பாளர்கள் நமது கோவில்களை அழித்தபோது, ​​இந்திய மக்கள் தங்கள் மத ஸ்தலங்களை காப்பாற்ற போராடினார்கள்.


ஆனால், காங்கிரசின் தலைவர்களும் அதன் கூட்டணி கட்சியினரும் பெரிய பங்களாக்களில் வசித்து வந்தனர். ராமர் கோயில் என வரும்போது, பின் முதுகை காட்டி அவர்கள் ஓடிவிட்டனர்" என்றார்.