அருப்புக்கோட்டையில் தனியார் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி சேர்மன் கல்லூரி மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியதாக பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பழைய பேருந்து நிலையம் சாலையில் அமர்ந்து மாணவிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் எலக்ட்ரோ ஹோமியோபதி மற்றும் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியின் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் (முன்னாள் பா.ஜ.க சிறுபாண்மை பிரிவு மாவட்ட தலைவர்) கடந்த 6 மாதத்திற்கு முன் அதே கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக  ஆபாசமாக பேசியதாக கூறப்படும் வீடியோ தற்போது அந்த கல்லூரி மாணவிகளிடம் பரவியது.



இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கல்லூரியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரிக்குச் செல்லாமல் கல்லூரி வாயிலில் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் மாணவிகளை சமரசம் செய்ய வந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.



கல்லூரியில் தங்கள் எதிர்காலம் குறித்தும் தங்களுடைய சான்றிதழ்கள் மற்றும் கட்டிய பணத்தை உடனடியாக திரும்பி தர வலியுறுத்தியும் கல்லூரி மாணவிகள் பெற்றோர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வந்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் எனக்கூறி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சமாதானத்தை ஏற்காமல்  தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தால் மதுரை விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அதிகாரிகள் மாணவிகளிடம் உன் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தய பின் அங்கிருந்து சென்றனர்.









தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார். 354 ஏ பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்தல், 354 பி- பாலியல் உறவுக்காக தொந்தரவு செய்தல், 354சி- பெண் நிர்வாண வீடியோவை பார்த்தல், 506- அந்தரங்க விடியோவை அனுப்பச் சொல்லி மிரட்டுதல், ஒரு பெண்ணிடம் செல்போனில் ஆபாசமாக பேசுவது, ஆதிதிராவிடர் பழங்குடியின பெண்ணிடம் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.