அமெரிக்க அரசு, இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு ஒரு நூதன எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, வகுப்புகளை புறக்கணித்தாலே விசா ரத்தாகிவிடும் என தெரிவித்துள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது எச்சரிக்கை குறித்த முழு விவரங்களை காணலாம்.
அமெரிக்காவில் படிக்கும் ஏராளமான இந்திய மாணவர்கள்
அமெரிக்காவில் லட்சக்கணக்கான இந்திய மற்றும் சர்வதேச மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு, இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகக் குழு, எந்த நாட்டிற்கும் இல்லாத அளவிற்கு, இந்திய மாணவர்களுக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர் விசாக்களை வழங்கி சாதனை படைத்தது. அதிலும், தொடர்ச்சியாக 3-வது ஆண்டாக இச்சாதனை படைக்கப்பட்டது.
அதே வருடத்தில், இந்தியாவில் உள்ள அமெரிக்க பணிக்குழு, 14 லட்சம் விசாக்களை வழங்கி சாதனை படைத்தது.
4,700 சர்வதேச மாணவர்களுக்கான விசாவை ரத்து செய்த அமெரிக்கா
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அங்கு படிக்கும் சர்வதேச மாணவர்களில், 4,700 பேரின் விசாக்கள் போதிய விளக்கமின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட மாணவர்களுக்கோ, அவர்கள் படிக்கும் பல்கலைக்கழகத்திற்கோ தெரியாமலேயே, அமெரிக்காவின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் தகவல் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தை கண்காணித்து வருகிறது.
இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தூதரகம் கொடுத்த எச்சரிக்கை என்ன.?
இப்படிப்பட்ட சூழலில், தற்போது இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு அமெரிக்க அரசு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், படிப்பை நிறுத்தினாலே, வகுப்புகளை புறக்கணித்தாலோ, உங்கள் பள்ளிகளுக்கு தெரிவிக்காமல் உங்கள் படிப்பை நிறுத்திவிட்டுச் சென்றாலோ, உங்கள் மாணவர் விசா ரத்து செய்யப்படும் என்றும், எதிர்காலத்தில் விசா பெறும் தகுதியையும் இழப்பீர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
விசாவிற்கான விதிமுறைகளை எப்போதும் முறையாக கடைபிடிக்கவும், பிரச்னைகளை தவிர்க்க மாணவர் என்ற நிலையிலேயே உங்களை பராமரித்துக்கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.