சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அதிமுக தான் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


ஓபிஎஸ் அறிக்கை


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஓராண்டு காலமாக சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுகவே விளங்குகிறது.


ஆனால் எதிர்க்கட்சி செயல்பாடுகளில் அதிமுக பின் தங்கியிருப்பது போன்ற மாயத்தோற்றம் சமீபகாலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காணும் இயக்கமாக அதிமுக செயல்படுகிறது.


தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிரதமர், ஒன்றிய அமைச்சர்களுக்கு நான் பல கடிதங்களை எழுதியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.


சமீப காலமாக தமிழ்நாட்டில் பாஜக தான் எதிர்க்கட்சி எனும் கருத்துகள் பாஜகவினரால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஓ.பி.எஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.


’பாஜக தான் தமிழகத்தின் எதிர்க்கட்சி’


முன்னதாக தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சியாக பாஜகவே உள்ளதாக அக்கட்சித் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து விவாதங்கள் எழுப்பப்பட்டும், கருத்து மோதல்கள் ஏற்பட்டும் வருகின்றன.


இந்நிலையில், ”தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் திமுக அரசு மீது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதனால், பாஜகதான் உண்மையான எதிர்க்கட்சி என்று அக்கட்சியினர் பேசி வருகிறார்கள்.  இந்நிலையில் தாங்கள்தான் எதிர்க்கட்சி என்பது போல பிரசாரம் செய்யும் பாஜகவை அம்பலப்படுத்துங்கள்” என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் காட்டாமாகப் பேசியிருந்தார். 


ஜெயக்குமார் காட்டம்


இந்நிலையில் பொன்னையன் வைத்த விமர்சனங்களைப் போலவே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.


அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஜெயக்குமார், ஆர் பி உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அதிமுக தலைமையகத்தில் கூடி நேற்று (ஜூன்.11) ஆலோசனை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தமிழகத்தில் பாஜக தங்கள் கட்சியை வளர்க்க எதிர்க்கட்சி என்ற மாயை  பிரசாரம் செய்து வருகிறது. அதிமுக தான் உண்மையான எதிர்க்கட்சி. ஒருபோதும் எதிர்க்கட்சி கடமையில் இருந்து அதிமுக விலகாது.


திமுக அரசின் ஓராண்டு ஆட்சியின்  மக்கள் விரோத செயல்பாடுகளை தோலுரித்துக் காட்டும் விதமாக அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பாஜக  மூக்கை நுழைக்கக் கூடாது. மதத்தை வைத்து அரசியல் செய்வது பிற்போக்குத்தனமானது மலிவானது” எனத் தெரிவித்தார்.