சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் வளாக பகுதியில் வழக்கமாக வாரச்சந்தை நடைபெறும். இதனால் இப்பகுதியில் அதிகளவு கூட்ட நெரிசல் ஏற்படும். இந்நிலையில் வாரச்சந்தை நடைபெறும் போது கூத்தாடி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது  சிறுமி ஒருவர் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது சந்தைப் பகுதியில் மின்னல் வேகத்தில் வந்த  கார் அந்த சிறுமியின் மீது விபத்தை ஏற்படுத்தியது. விசாரணையில் திருப்பத்தூரை சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகன் செந்தில்குமார் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தியது தெரிதவந்தது.

 



 

விபத்தில் காயமுற்ற சிறுமியின் இடது கால் முறிவு ஏற்பட்டது. மேலும் சிறுமியின் கைகளிலும் படுகாயம் ஏற்பட்டது. அங்கே இருந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இது குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன் விசாரணைக்கு சென்றார். அப்போது அவரிடம் பாஸ்கரன்,  நாகப்பன், செந்தில்குமார் ஆகிய  மூவரும் காவல் ஆய்வாளரிடம் கடுமையான குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு பணியை செய்யவிடாமல் இடையூறு செய்துள்ளனர். 



 


இச்சம்பவம் குறித்து கூத்தாடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி மற்றும் சிங்கம்புணரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன் கொடுத்த இரண்டு புகாரின் அடிப்படையில் பாஸ்கரன், நாகப்பன், செந்தில்குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மூவரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.  குடிபோதையில் அதிவேகமாக மக்கள் நடமாடும் சந்தை பகுதியில் விபத்தை ஏற்படுத்தியது, அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரண்டு புகாரையும் பதிவுசெய்து சிங்கம்புணரி ஆய்வாளர் மகேஸ்வரி நடவடிக்கையை மேற்கொண்டார். சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

மேலும் இது குறித்து காவல்துறையினர் -  வேகமாக கார் ஓட்டிவந்ததில் சிறுமிக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. விசாரிக்க சென்ற போக்குவரத்து காவல் ஆய்வாளரிடமும் போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தை பகுதியில் இடையூறு ஏற்படாத வகையில் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய செயல் அலுவலர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.