கொரோனா முழு ஊரடங்கு சமயத்தில் தான் மீன்பிடி தடை காலமும் நீடித்தது. மீன்பிடி தடைக்காலம் நீங்கியதும் மீனவர்கள் கடலுக்கு சென்ற பின்னர், சமூக விரோதிகளும் மீண்டும் கடல் அட்டை திருட்டில் ஈடுபட ஆரம்பித்தனர். இராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் மட்டும் சுமார் 3 டன் வரையிலான கடல் அட்டைகள் கைபற்றப்பட்டன. இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 60 கிலோ கடல் அட்டையை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.



பாக் ஜலசந்தி பகுதியில் பகுதியான பிரப்பன்வலசை கடற்கரையில் மண்டபம் சரக அலுவலர் ஜி. வெங்கடேஷ் தலைமையில் வனவர் மகேந்திரன், வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் உடன் நள்ளிரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.  அப்போது கடல் அட்டையை இலங்கைக்கு கடத்த முயன்றவர்கள் வனத்துறையினரை கண்டதும் கடலுக்குள் சேகரம் செய்யப்பட்ட அரிய வகை கடல் அட்டைகளை கடலில் உள்ளேயே பதுக்கிவிட்டு  தப்பிச் சென்றனர்.  அதனை தொடர்ந்து நிலா வெளிச்சம், டார்ச்சை லைட் வெளிச்சத்திலும் வைத்து ஒரு மணிநேரம் கடலுக்குள்ளேயே தேடி, பதுக்கி வைத்த சுமார் 35 கிலோ எடையுள்ள உயிருடன் உள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.



கடல் அட்டை தொடர்பாக கூடுதல் தகவல் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - இராமேஸ்வரம் ; கடல் அட்டை ஏன் கடத்தப்படுகிறது? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வது என்ன?

 

மேலும் பிரப்பன்வலசை கடற்கரையில் பதிவு எண் இல்லாத ஒரு இருசக்கர வாகனத்தில் சுமார் 25 கிலோ உயிருடன் உள்ள கடல் அட்டையுடன் இருப்பதை கண்டுபிடித்து,  இருசக்கர வாகனம் மற்றும் உயிருள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்தனர்.

 

மொத்தம் சுமார் 60 கிலோ உயிருடன் உள்ள கடல் அட்டைகள் பறிமுதல் செய்த நிலையில்  மண்டபம் வனச்சரகம் கொண்டுவரப்பட்டு இன்று ராமேஸ்வரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் கடலில் விட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உயிருடன் உள்ள கடல் அட்டைகள் அனைத்தும் இராமேஸ்வரம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் கடலில் விடப்பட்டன.



இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வழியாக பல்வேறு இடங்களுக்கு கடல் அட்டைகளை கடத்தலாம் என்பதால் இராமேஸ்வரம் பகுதியியை கடல் அட்டைகள் கொள்ளைக்கு ஹாட் ஸ்பாட்டாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் முழு ஊரடங்கிற்கு பின் இராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து டன் கணக்கில் கடல் அட்டை பிடிபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.