முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியை தாண்டிய நிலையில், அணைப்பகுதியில் செய்யப்படவேண்டிய பணிகள் குறித்து துணை கண்காணிப்பு குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, மூன்று பேர் கொண்ட 'கண்காணிப்பு குழுவை" உச்சநீதிமன்றம் நியமித்தது. பின் உச்சநீதிமன்றம் கண்காணிப்பு குழுவில் இரு மாநில தொழில் நுட்ப வல்லுனர்களையும் சேர்க்க அறிவுறுத்தியது. தற்போது இந்த ஐவர் குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜயசரண் தலைமையில் ஆய்வு நடந்தது.
இக்குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சதீஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கட்டப்பனை நீர்ப்பாசன செயற்பொறியாளர் அனில்குமார், உதவி பொறியாளர் அருண்ராஜ் ஆகியோர் உள்ளனர்.
இக்குழு கடந்த ஆகஸ்ட் 17-ல் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். இந்நிலையில், இன்று பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.30 அடியாக உள்ள நிலையில், அணையில் செய்துவரும் வழக்கப்பணிகளையும், செய்யப்படவேண்டிய பணிகளையும் ஆய்வு செய்தனர். முன்னதாக துணை குழுவினர் பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகுப்பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்பு அனையின் கசிவு நீர் (சீப்பேஜ் வாட்டர்) குறித்தும் ஆய்வு செய்தனர்.
Sabarimala Temple: பக்தர்களே கவனிங்க! சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை...நாளை நடை திறப்பு!
முன்னதாக தமிழக அதிகாரிகள் பொதுப்பணி துறையின் கண்ணகி படகில் தேக்கடி படகுத்துறையில் இருந்து அணைக்கு கிளம்பிச் சென்றனர். துணைக் குழுவின் ஆய்வைத் தொடர்ந்து, இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் குமுளியிலுள்ள உயர்நிலை கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. பின் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவுகள் கண்காணிப்பு குழுவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.