இந்தியாவின் மிகவும் முக்கியமான நிதி நிறுவனங்களில் ஒன்று பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம். இவர்களுக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். முன்னணி கடன் வழங்கும் நிறுவனமாகவும் விளங்கும் பஜாஜ் பைனான்ஸ்  நிறுவனம் 2 திட்டங்களின் கீழ் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இணையத்தில் கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றாததால் ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடன் வழங்க தடை:


பஜாஜ் நிதி நிறுவனம் இ- காம் மற்றும் Insta EMI Card  ஆகிய திட்டங்களின் கீழ் கடன் வழங்குவதில் விதிகளை மீறியதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனம் மேலே கூறிய 2 திட்டங்களின் கீழேயும் கடன் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மேலும், ரிசர்வ் வங்கியின் இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் முன்னணி கடன் நிறுவனமாக திகழும் பஜாஜ் கடன் நிறுவனம் இந்தியா முழுவதும் பல கிளைகளை கொண்டு செயல்படுகிறது. இணையதள வளர்ச்சிக்கு பிறகு வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும், உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்காகவும் ஏராளமான திட்டங்களை அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.


இ.காம், இன்ஸ்டா இ.எம்.ஐ. கார்டு:


இந்த சூழலில் E Com மற்றும் Insta EMI Card திட்டத்தின் கீழ் கடன் வழங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு முழு விவரங்களையும் அளிக்காமல் கடன்களை வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களிடம் எந்த விதத்தில் கடன் வழங்கப்படுகிறது? எந்த விதத்தில் கடன் வசூலிக்கப்படுகிறது? இந்த முறையில் கடன் பெறுவதால் வாடிக்கையாளர்கள் என்ன தொகையில் கடனை திருப்பித் தர வேண்டும்? என்பதை வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதியாகும்.


ஆனால், ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு மீறாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் இந்த 2 திட்டங்களின் கீழ் கடன் வழங்கும்போது, போதியளவு வெளிப்படைத் தன்மை இல்லாமல் வழங்குவதாக ரிசர்வ் வங்கி கருதியதால், அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். கடன் வழங்கும் நிறுவனங்கள் முழுமையான தகவல்களை அளிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவது தவறாகும். மேலும், ரிசர்வ் வங்கியின் விதிப்படி கடன்களை வழங்குவதில் வெளிப்படைத் தன்மை கொண்டு வரும் வரை இந்த திட்டங்களை மீண்டும் செயல்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.


ரிசர்வ் வங்கியின் விதிகளை முழுமையாக செயல்படுத்தினால் மட்டுமே பஜாஜ் நிறுவனத்தின் இ காம் மற்றும் இன்ஸ்டா இ.எம்.ஐ. கார்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதால், பங்குச்சந்தையில் இது எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Sabarimala Temple: பக்தர்களே கவனிங்க! சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை...நாளை நடை திறப்பு!


மேலும் படிக்க: Adultery Crime Again: ”திருமணத்தை மீறிய உறவை குற்றமாக்கவேண்டும்” - மத்திய அரசுக்கு எம்.பிக்கள் குழு பரிந்துரை